சோமாலியாவில் வறட்சி: 2 நாளில் 110 பேர் பலி

தினமலர் செய்தி : மொகாதிசு: சோமாலியாவில் கடும் வறட்சி காரணமாக ஒரே பகுதியில் கடந்த 2 நாளில் 110 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்

தேசிய பேரிடர்:

சோமாலியாவில், எல் நினோ பாதிப்பு காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். ஏராளமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் தவித்து வருகின்றனர். ஏராளமான விலங்குகள் உணவில்லாமல் ஆங்காங்கே இறந்து கிடக்கின்றன. இந்த வறட்சியை தேசிய பேரிடர் என அந்நாட்டு அதிபர் முகமது அப்துல்லாஹி அறிவித்துள்ளார்.

உதவுக...:

இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் ஹசன் அலி கைரே கூறியதாவது: "நாட்டில் கடுமையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் வறட்சி மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், குறிப்பிட்ட ஒரே பகுதியில் கடந்த 2 நாளில் மட்டும் 110 பேர் பலியாகியுள்ளனர். மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அரசு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். உலகின் பல இடங்களில் உள்ள சோமாலியர்கள், வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

லட்சக்கணக்கில் பலி:

கடந்த 2011ம் வருடத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக சுமார், 2,60,000 மக்கள் உயிரிழந்துள்ளனர். இதேபோல் கடந்த 1992ம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக, 2,20,000 மக்கள் உயிரிழந்துள்ளனர். கடும் பஞ்சம் மற்றும் பசியினால் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் 4 நாடுகளில் சோமாலியாவும் ஒன்று. இந்த பட்டியலில் தெற்கு சூடான், நைஜீரியா, ஏமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

Comments