எம்.எல்.ஏ.,க்களுக்கு கிராக்கி
1. கோவா சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, 40. பெரும்பான்மை அமைக்க, 21 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. தேர்தலில், காங்கிரசுக்கு, 17, பா.ஜ.,வுக்கு 17 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்து தொங்கு சட்டசபை நிலைமை உருவானது. எனவே, தலா மூன்று எம்.எல்.ஏ.,க்கள் வைத்துள்ள கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்த் கட்சி; மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், தேசியவாத காங்., எம்.எல்.ஏ., ஆகியோருக்கு நல்ல கிராக்கி உருவானது. அவர்களும் தங்களை ‛அணுகுபவர்களுக்கு' ஒத்துழைப்பு தர தயாராகவே இருந்தனர்.
2. காங்கிரசிடம், 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இருப்பினும், சட்டசபை கட்சி தலைவர் அதாவது முதல்வர் யார் என்பதை தீர்மானம் செய்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதே நேரத்தில் பா.ஜ., தரப்பினர் மிக வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டனர்.
3. கோவா தலைநகர் பனாஜியில் உள்ள மண்டோவி ஓட்டலில், காங்., பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் முகாமிட்டு இருந்தனர். இவர்கள் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த போது, 5 மணி நேரம் முதல்வர் யார் என்பது குறித்து தான் தீவிரமாக விவாதித்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் தங்களை காண வருவார்கள் என்ற எதிர்பார்ப்பிலும் அவர்கள் இருந்தனர்.
ரகசிய ஓட்டெடுப்பு
4. மாநில காங்., தலைவர் லூசினோ பாலிரியோ, முன்னாள் முதல்வர்கள் திகம்பர் காமத், பிரதாப் சிங் ரானே ஆகியோர், காங்., தரப்பில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி போட்டனர். இவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் நிராகரித்து பொன்னான நேரத்தை வீணடித்தனர். யார் அடுத்த முதல்வர் என்பதை தேர்தெடுக்க, ரகசிய ஓட்டெடுப்பு கூட நடத்தப்பட்டது. இந்த விஷயம் ஜூனியர் எம்.எல்.ஏ.,க்கள், பத்திரிகையாளர்களுக்கு தெரியாது.
5. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று மாலை, அந்த ஓட்டலில் இருந்து எம்.எல்.ஏ., ஜெனிபர் மான்செர்டே உள்ளிட்ட காங்., மூத்த தலைவர்கள் விரக்தியுடன் வெளியே வந்தனர். சட்டசபை கட்சி தலைவரை தேர்தெடுக்க முடியாதது, கூட்டணி அரசு அமைக்க முயற்சி எடுக்காதது அவர்களுக்கு கடும் வேதனையை ஏற்படுத்தியது.
பதவி தந்த அதிர்ச்சி
6. அந்த நேரத்தில் தான், ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ., தலைவர்கள் ராஜ்பவன் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோர போகின்றனர் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து, காங்கிரசில் முதல்வர் பதவிக்கு போட்டி போட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் பின்வாங்கினர். மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக தேர்தெடுக்கப்பட்டுள்ள சந்திரகாந்த் காவ்லிகர் என்பவரை சட்டசபை கட்சி தலைவராக, ஒருமனதாக தேர்வு செய்தனர். இதை அறித்த காவ்லிகர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
7. கோவாவில் காங்., ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலைக்கு தான் தான் காரணம் என்பதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் ஏற்றுக் கொண்டார். ஆனால், சுயேச்சை எம்.எல்.ஏ., ரோகன் கோந்தி, கோவா பார்வர்டு கட்சி எம்.எல்.ஏ., சர்தேசாய் ஆகியோர் முதுகில் குத்தி விட்டனர் என அவர் குற்றம் சாட்டினார்.
8. இதே நேரத்தில், பனாஜி நகரில் மற்றொரு இடத்தில் இருந்த தாஜ் ஓட்டலில், மகாராஷ்டிரவாதி கோமந்த் கட்சி, கோவா பார்வர்டு கட்சி எம்.எல்.ஏ.,க்கள், சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களுடன் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, மனோகர் பரிக்கர் ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
விடிய விடிய பேச்சு
9. தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை அன்று வெளியாகின. அன்று இரவே நிதின் கட்கரி, கோவா வந்து சேர்ந்தார். அந்த மாநிலத்தில் ஆட்சியை அமைக்க வேண்டும் என கட்சி மேலிடம் அவருக்கு தீவிரமாக அறிவுறுத்தி இருந்தது. எனவே, அன்று நள்ளிரவு 1 மணி முதல், மகாராஷ்டிரவாதி கோமந்த் கட்சி தலைவர் சுதின் தாவாலிகருடன் கட்கரி பேச தொடங்கினார். இந்த பேச்சு வார்த்தை, அதிகாலை, 4 மணிக்கு முடிந்தது. அனைத்தும் நல்லபடியாகவே செல்கிறது என கட்கரி கூறினார். இதன் பிறகு, பானாஜி அருகே சிடேடி டி கோவா என்ற ரிசார்ட்டில் தங்கி இருந்த கோவா பார்வர்டு கட்சியை சேர்ந்த சர்தேசாயுடன் கட்கரி பேச தொடங்கினார்.
10. சிறிது நேரத்தில், சர்தேசாய் வீட்டுக்கு புறப்பட்டார். பா.ஜ., அளித்த வாக்குறுதிகள் சிறப்பாக இருந்தன என சர்தேசாய் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த நேரத்தில், நிதின் கட்கரி ஒரு தூதரை அனுப்பி சர்தேசாயை மீண்டும் அந்த ரிசார்ட்டுக்கு அழைத்து வர செய்தார். கோவா பார்வர்டு கட்சிக்கு மூன்று எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழக்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு கூட்டணி இறுதி செய்யப்பட்டது.
11. இதுதவிர இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கிடைக்க, மனோகர் பரிக்கர் உள்ளிட்ட கோவா பா.ஜ., தலைவர்கள், ஆட்சி அமைக்க உரிமை கோர, ராஜ்பவனுக்கு புறப்பட்டனர். கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அளித்த ஆதரவு கடிதங்களில், மனோகர் பரிக்கர் முதல்வர் என்றால் மட்டுமே ஆதரவு தருகிறோம் என்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.
சர்தேசாய் சரண்டர்
12. இந்த விஷயத்தில் தான் அனைவருக்கும் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. கோவா முதல்வராக மனோகர் பரிக்கர் இருந்த போதும், அவர் ராணுவ அமைச்சராக பதவி வகித்த போதும் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர் சர்தேசாய். ஆனால், அவரே பா.ஜ., ஆட்சிக்கு ஆதரவு அளித்தது எப்படி என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது.
13. பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் சென்று இருந்த போது போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அப்போது, சர்தேசாய் தன் டுவிட்டர் பக்கத்தில், கோவாவில் மீன் கடையில் ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர் மீன் விற்று கொண்டிருப்பதை பார்த்தேன் என்று கிண்டல் அடித்து கருத்து வெளியிட்டு இருந்தார்.
14. ஆனால் இப்போது சர்தேசாய் மனம் மாறி விட்டார். நிர்வாக திறமை மிக்கவர் பரிக்கர் என்று கூறி வருகிறார். இடையில் என்ன நடந்தது என்பது தான் மர்மமாக உள்ளது.
Comments