சிக்கலில் "ஜக்கி" ... 109 ஏக்கரில் விதிகளை மீறி கட்டிடம்- ஈஷா மீது தமிழக அரசு புகார்

TN Govt files reply against Isha centre coimbatoreOneIndia News : சென்னை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் விதிகளை மீறி 109 ஏக்கரில் கட்டிடங்களை கட்டியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. ஆதியோகி சிவன் அமைத்தற்கான ஆவணங்களை கேட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ளது ஈஷா யோகா மையம். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்துக்கு உட்பட்ட இப்பகுதியில் கட்டிட கட்டுமானம் மேற்கொள்ள அதிக விதிமுறைகள் உள்ளன.

இந்நிலையில், உலகிலேயே மிகப்பெரிய திருமுகமாக 112 அடி உயர ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது. மகாசிவராத்திரி நாளில் இந்த சிலையை பிரதமர் மோடி வைத்தார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட சில மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

இந்த சிலை அமைத்ததில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளதாகவும், திறப்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் விழாவில் பிரதமர் பங்கேற்று ஆதி யோகி சிலையை திறந்து வைத்தார்.

முன்னதாக கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் பி.முத்தம்மாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இக்கரை போழுவம்பட்டி கிராமத்தில் 3 ஏக்கரில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலைக்காக விதிகளை மீறி கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. சிலைக்காக 300 சதுர மீட்டர் பரப்புக்கு விளைநிலங்களை மாற்ற ஆட்சியர் அனுமதித்துள்ளார். ஆனால் விதிகளை மீறியும், வனம், சுற்றுச்சூழல், நகர ஊரமைப்புத் துறைகளின் அனுமதி பெறாமலும் கட்டிடங்களை கட்டுகின்றனர். எனவே, கட்டுமானங்களுக்கு தடை விதித்து, சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று, வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்த போது உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. அதில் ஈஷா யோகா மையம் விதிகளை மீறி 109 ஏக்கரில் கட்டிடங்கள் கட்டியுள்ளதாக கூறியுள்ளது. ஆதியோகி சிலை அமைக்கப்பட்டதற்கான ஆவணங்களை கேட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Comments