அமித்ஷா அறிவிப்பு
1.மணிப்பூரில், 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. முதல்வர் இபோபி சிங் தலைமையில் காங்., ஆட்சி நடந்து வந்தது. தேர்தலில், காங்கிரசுக்கு, 28; பா.ஜ.,வுக்கு 21 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தனர். பெரும்பான்மையை நிரூபிக்க, 31 எம்.எல்.ஏ.,க்கள் தேவை.
2. தேர்தல் முடிவுகள் வெளியான உடன், ‛உ.பி., உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூரில் பா.ஜ., ஆட்சியை அமைக்கும்' என, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா வெளிப்படையாக பேட்டி அளித்தார்.
3. கோவா மற்றும் மணிப்பூரில் பா.ஜ., ஆட்சியை அமைக்க, சிறிய கட்சிகளுடன் தீவிர பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டது.
4. தேர்தல் முடிவுகள் வெளியான, 48 மணி நேரத்திற்குள் மணிப்பூர் சட்டசபை பா.ஜ., தலைவராக முன்னாள் பத்திரிகையாளர் பிரன் சிங்கை பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்தனர்.
ராஜினாமா செய்ய உத்தரவு
5.மணிப்பூரில் முகாமிட்டு இருந்த பா.ஜ.,வின் மத்திய அமைச்சர் பியுஸ் கோயல், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர், சிறிய கட்சிகளுடன் தீவிர பேச்சு வார்த்தை நடத்தினர். ‛கடந்த ஆண்டு அசாமில் பா.ஜ., ஆட்சி அமைந்தது போல, மணிப்பூரிலும் நடக்கும்' என, உத்தரவாதம் அளித்தனர்.
6. திங்கட்கிழமை அன்று, தேசிய மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் நான்கு எம்.எல்.ஏ.,க்கள், நாகா மக்கள் முன்னணி கட்சியின் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் , பா.ஜ.,வுக்கு தாவிய காங்., எம்.எல்.ஏ., மற்றும் லோக் ஜனசக்தி கட்சியின் எம்.எல்.ஏ., உடன் பா.ஜ., முக்கிய பிரமுகர்கள்கவர்னரை சந்தித்தனர்; தங்களுக்கு, 32 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்தனர். இதை அறிந்து முதல்வர் இபோபி சிங் அதிர்ச்சி அடைந்தார்.
7. முதல்வர் இபோபி சிங், உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டார். அவரை நேரில் சந்தித்த இபோபி சிங், காங்கிரசின்,28 எம்.எல்.ஏ.,க்கள், தேசிய மக்கள் கட்சியின் நான்கு எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக தெரிவித்தார். நான்கு எம்.எல்.ஏ.,க்களின் பெயர்களை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி காட்டினார்.
போலி கடிதம்
8. இதை ஏற்க மறுத்த கவர்னர், தேசிய மக்கள் கட்சியின் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அக்கட்சியின் தலைவர் ஆகியோரை கவர்னர் மாளிகைக்கு அழைத்து வந்து, நேரில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த இபோபி சிங், மீண்டும் ஆட்சி அமைக்கும் உரிமையை கோரினார்.
9. தேசிய மக்கள் கட்சியின் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் கொடுத்த கடிதம் போலியானது என தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா அறிவித்தார். இது, இபோபி சிங்கிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
10. பா.ஜ., சார்பில் பிரன் சிங், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இவர், இபோபி சிங் தலைமையிலான அரசில், 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவர். கடந்த ஆண்டு பா.ஜ., கட்சிக்கு தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments