வரலாறு காணாத சரித்திர புரட்சியின் விளைவாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டசபையில் அவசர சட்டம் இயற்றினார். பின்னர் அந்த அவசரச் சட்டம் சட்டமாக்கப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டது. தமிழகத்தைத் தொடர்ந்து கர்நாடகத்தில் கம்பளா என்ற பாரம்பரிய விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து கம்பளா விளையாட்டை மீண்டும் நடத்த வகை செய்யும் அவசர சட்ட மசோதா அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே, முன்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, சாதகமான தீர்ப்பை பெற்ற பீட்டா அமைப்பு இவ்விவகாரத்தில் வழக்கு ஏதும் தொடராமல் அமைதி காத்து வந்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு மற்றும் கம்பளா போட்டிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கும் சட்டத்தை எதிர்த்து இன்னும் சில நாட்களில் வழக்கு தொடருவோம் என்று அந்த அமைப்பை சேர்ந்த மணிலால் வல்லியாட்டே என்பவர் நேற்று தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு மற்றும் கம்பளா ஆகியவற்றை ஒரே மனுவின் மூலம் எதிர்த்து வழக்கு தொடர்வதா? அல்லது, தனித்தனியாக வழக்கு போடுவதா? என்பது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments