சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர், கடும் இம்சைகளை அனுபவித்து வருவதாகவும்; தங்களை அந்த சிறையில் இருந்து மாற்றி தமிழகத்துக்கு கொண்டு செல்லுமாறும், குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்து வருகின்றனர்.
சாமி ஆலோசனை:
இந்நிலையில், சசிகலாவை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான தீவிர முயற்சியில், அ.தி.மு.க.,வினர் இறங்கி உள்ளனர். இதற்காக, உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் தயாராகி வருகின்றனர். முன்னதாக, இது தொடர்பான சட்ட ஆலோசனைகளை யாரிடம் கேட்டுப் பெறுவது என்பதில் பெரும் குழப்பம் நிலவியது.
கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், சமீப காலமாக நம்மோடு நெருக்கமாகவும்; இணக்கமாகவும் இருந்து வரும் சுப்பிரமணியன் சாமியிடம், ஆலோசனை கேட்டு, அதன்படி செய்யலாம். முதன் முதலில், சசிகலாவை பெங்களூரு சிறையில் இருந்து தமிழகத்துக்கு மாற்றுவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. தேவையானால், அந்த உதவியை நானே செய்து தருவேன் என்று சொல்லியிருக்கிறார் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர், டில்லியில், சுப்பிரமணியன் சாமியை, சந்தித்து பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது, சிறை மாற்றம் தொடர்பாக, நிறைய சட்ட ஆலோசனைகளை வழங்கி உள்ளதாகத் தெரிகிறது. அதோடு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, மறு சீராய்வு மனு போடவும் சில யோசனைகளை, அ.தி.மு.க., தரப்பிடம் கூறி உள்ளதாகவும் தெரிகிறது.
Comments