சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க, இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் சென்றுனர். ஆனால், சசிகலாவை பார்க்க சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஏமாற்றம்:
அப்போது செங்கோட்டையன் டிரைவர், சிறை அதிகாரிகளிடம் வந்துள்ளவர்கள் யார் என தெரியுமா? அமைச்சர்கள். அவர்களை உடனடியாக அனுமதிக்க வேண்டும் என மிரட்டல் தொனியில் பேசினார். ஆனால், சிறையில் அமைச்சரவை கூட்டமா நடக்கப்போகிறது என பதிலளித்த சிறை அதிகாரிகள், அவர்களுக்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர். இதனையடுத்து அமைச்சர்கள் மூன்று பேரும் தங்கியிருந்த ஓட்டலுக்கே திரும்பிவிட்டனர். பின்னர், பெங்களூருவில் இருந்து கிளம்பி சென்னை வந்தனர்.
எச்சரிக்கை:
அமைச்சர்கள் தங்கிய ஓட்டலுக்கு சென்ற போலீசார், செங்கோட்டையன் கார் டிரைவரை பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து, டிரைவர் மிரட்டும் தொனியில் பேசுவதாக கூறி எச்சரிக்கை விடுத்தனர்.
திட்டு;
இந்நிலையில், இன்று மாலை அதிமுகவை சேர்ந்த கோகுலா இந்திரா, வளர்மதி மற்றும் சி.ஆர்.சரஸ்வதி சிறை வளாகத்திற்கு வந்தனர். ஆனால் அவர்களை சசிகலா பார்க்க விரும்பவில்லை. அப்போது கோகுல இந்திராவுக்கு மொபைல் மூலம் அழைப்பு வந்தது. அதில் பேசியவர் ஆபாசமாக திட்ட துவங்கினார். வளர்மதியிடம் மொபைலை கோகுல இந்திரா கொடுத்தார். அவரையும் பேசியவர் ஆபாசமாக திட்டினார். இதனையடுத்து வளர்மதி மொபைல் இணைப்பை துண்டித்தார். தொடர்ந்து அந்த நபர் மீண்டும் மொபைல் மூலம் அழைப்புவிடுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
Comments