சவுதி அரேபிய இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

தினமலர் செய்தி : ரியாத்: நண்பனை சுட்டுக் கொன்ற வழக்கில், சவுதி அரேபிய இளவரசருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், 'ஷரியத்' சட்டம், தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இந்த சட்டத்தின்படி, கொலை, போதை மருந்து கடத்தல், கொள்ளை, பாலியல் பலாத்காரம் ஆகிய குற்றங்களை செய்பவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்படுவது வழக்கம். 

கொலை :

சவுதி அரேபிய அரச கும்பத்தைச் சேர்ந்தவர், இளவரசர் டர்க்கி பின் சவுத் அல் -கபீர்; இவரது நண்பர், அதெல் அல் மகிமித். 2012 டிசம்பரில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களுக்குள் ஏற்பட்ட கைகலப்பில், ஆத்திரமடைந்த இளவரசர் கபீர், நண்பர் மகிமித்தை துப்பாக்கியால் சுட்டார்; இதில், மகிமித், அதே இடத்தில் பலியானார்.

மரண தண்டனை :

இளவரசர் கபீர் மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரியாத் கோர்ட்டில் விசாரணை நடந்தது. கபீருக்கு மரண தண்டனை விதித்து, 2014ல், கோர்ட் தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்து, கபீருக்கு நேற்று, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

2016ல் 134 பேர்....

சவுதியில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தலையை, வாளால் வெட்டி, தண்டனை நிறைவேற்றப்படுவது போல், கபீருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது. கபீரையும் சேர்த்து, இந்தாண்டு மட்டும், இதுவரை, 134 பேருக்கு, சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதிலும், ஜனவரியில், ஒரே நாளில், 47 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Comments