மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை - வைகோ

 There is no disagreement among leaders, says vaiko OneIndia News : சென்னை: மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் பங்கேற்காது என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ முன்னதாக தெரிவித்திருந்தார். மேலும் திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது ஏமாற்று வேலை. இது ஒரு நாடகம் எனவும் அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இடையே கடும் மோதல் உருவாகியதாக கூறப்பட்டது. இருப்பினும் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கான முயற்சிகளை விசிக எடுத்து வந்தது. இதற்காக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர் திருமாவளவன்.

இதனிடைய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர் திருமாவளவன். இறுதியில் கூட்டணியில் உள்ள பெரும்பான்மையின் அடிப்படையில் திமுக அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது: வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள எனவும், காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீபாவளிக்கு பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் கூறினார்.

மேலும், மக்கள் நலக் கூட்டணி இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளோம். மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே எந்த கருத்து முரண்பாடுகள் ஏதும் இல்லை. ஒற்றுமையுடன் இருக்கிறோம். இவ்வாறு வைகோ கூறினார்.

Comments