OneIndia News : சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி இடைத்தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கப் போவதாக அக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்துள்ளார். தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 19-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் வேலைகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அதிமுக சார்பில் தஞ்சாவூரில் எம்.ரெங்கசாமி, அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் முன்னாள் எம்எல்ஏவான ஏ.கே.போஸ் போட்டியிடுகின்றனர். 3 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக பாமக, பாஜக அறிவித்துள்ளன. அதேபோல் திமுக சார்பில் அரவக்குறிச்சியில் கே.சி.பழனிச்சாமி, தஞ்சாவூரில் அஞ்சுகம் பூபதி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். பாமக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. தேமுதிக இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் மதிமுக தலைமை அலுவலகத்தில் 3 தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக மக்கள் நல கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி இடைத்தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
Comments