ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் என அனைத்து நவீன சமூக வலைதளங்களுமே நிகழ்வுகளை உடனுக்குடன் பரிமாற உதவுகின்றன. இளையசமூகம் இவற்றிலேயே "குடியிருக்கும்" மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால்தான் அரசியல் கட்சி தலைவர்கள் முழுமையாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றன. திமுக, அதிமுக, பாமக, மதிமுக, பாஜக, இடதுசாரிகள் என அனைத்து பெரிய, சிறிய அரசியல் கட்சிகளும் ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் உயிர்ப்போடு தங்களை வெளிப்படுத்தி வருகின்றன.
முடங்கிய தேமுதிக
தலைவர்களின் அறிக்கைகள், அறிவிப்புகள் அனைத்துமே ஃபேஸ்புக், ட்விட்டரில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் தேமுதிகதான் சற்றே வேறுபட்டு நிற்கிறது... அதுவும் சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னர் தேமுதிகவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் மே 14-ந் தேதி முதல் முடங்கியே இருக்கிறது.
பஞ்சமில்லா பஞ்ச் டயலாக்
அதற்கு முன்னர் தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த் என்பதை உறுதிசெய்துவிட்டது போல இடைவிடாத பதிவுகளைப் ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டு அசரடித்து வந்தனர். மாறப்போவது அரசு; ஆளப்போவது முரசு; கடந்தது கடன்காலம் வருகிறது கார்காலம் என்ற பஞ்ச் வசனங்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது அந்த ஃபேஸ்புக் பக்கம்.
ஆரூடம் சொன்ன கணிப்புகள்
தேர்தல் பிரசாரங்கள், தேமுதிக தேர்தல் அறிக்கைகளை பகுதி பகுதியாக வெளியிட்டு பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்தது தேமுதிகவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம். தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் வெளியான கருத்து கணிப்புகள் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி படுமோசமான தோல்வியை தழுவும் என்றே கூறின.
விட்டா போதும்டா சாமி
இதனால்தான் என்னவோ சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நடக்கும் முன்னரே ஃபேஸ்புக் பக்கத்தைவிட்டு தப்பி ஓடிவிட்டது தேமுதிக... அன்று எஸ்கேப்பான தேமுதிக 5 மாதங்களாக ஃபேஸ்புக் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. அதே நேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தோ தம்முடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் சொல்லி வைத்தார்போல் "அவ்வப்போது" அறிக்கைகளை பதிவிட்டு வருகிறார்.
தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம்... அதற்காக இப்படியா ஒரே ஓட்டமாக ஓடி மறைவது?
Comments