ஜெயலலிதா, சசிகலா தரப்பு
ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் நாகேஸ்வர ராவ் வாதிட்டார். இதையடுத்து சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே தனது வாதத்தை முன்வைத்தார்.
ஆச்சாரியா வாதம்
இதையடுத்து கர்நாடக தரப்பில் பதில் வாதத்தை தாக்கல் செய்ய ஆச்சாரியாவுக்கு 2வது சுற்று வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் நேற்று வாதத்தை தொடங்கினார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிலைக்காது, சொத்து குவிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது என்று ஆச்சாரியா வாதம் முன் வைத்தார்.
சொத்து மதிப்பு
2வது நாளாக இன்றும், ஆச்சாரியா வாதத்தை தொடர்ந்தார். அப்போது, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் ரூ.66 லட்சம் என சசிகலா தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் சொத்து மதிப்பை ரூ.13 லட்சம் என குறைத்து காட்டியுள்ளனர் என்று ஆச்சார்யா குற்றம்சாட்டினார்.
கிடுக்கிப்பிடி
இதையடுத்து முரண்பட்ட தகவலை கூறியது ஏன் என உச்சநீதிமன்றம் சசிகலா தரப்பிடம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து வாதத்தை தொடர்ந்த ஆச்சாரியா, சசிகலா தரப்பு மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதிகார மையம்
ஆச்சாரியா கூறியதாவது: சொத்துக்குவிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர் சசிகலா. இவர் ஒரு அதிகாம்மிக்க பெண்ணாக உலாவருபவர்.
சின்னம்மா
அதிமுகவில் சசிகலா சின்னம்மா என்று அழைக்கப்படும் அளவுக்கு செல்வாக்கு உண்டு. அதிமுக கட்சியையும், போயஸ் கார்டனையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் சசிகலா.
போலி நிறுவனங்கள்
இந்த நிலையில்தான், சசிகலா உள்ளிட்டவர்கள், சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை சட்டத்திற்கு உட்பட்டதாக காட்டிக்கொள்வதற்காக பல போலி நிறுவனங்களை உருவாக்கினர். இவற்றில் எந்த பணியும் நடைபெறாது என்றபோதிலும், பணம் வருவதற்கான கணக்கை காட்டுவதற்காக இந்த நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன.
தண்டனை
எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ஆச்சாரியா வாதிட்டார். ஆச்சாரியா நாளையும் வாதிட உள்ளார். வியாழக்கிழமை தனது வாதத்தை அவர் நிறைவு செய்வார். அப்போது, தீர்ப்பு தேதி குறித்து நீதிபதிகள் அறிவிக்க வாய்ப்புள்ளது.
Comments