'சரத்குமாரின் வேட்புமனு பொய்யானது'

தினமலர் செய்தி : சென்னை: திருச்செந்துார் தொகுதியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் சரத்குமாரின் வேட்புமனுவை நிராகரிக்க கோரி, சுயேச்சை வேட்பாளர் சார்பில், தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்துார் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தி.மு.க., சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிடுகின்றனர்.வேட்பு மனு பரிசீலனையின் போது, சரத்குமாரின் மனுவை நிராகரிக்கும்படி, சுயேச்சை வேட்பாளர் சுகுமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யு.எம்.ரவிச்சந்திரன் கோரினார். ஆனால், வேட்பு மனு ஏற்கப்பட்டது. இதையடுத்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு, சுயேச்சை வேட்பாளர் சார்பில், வழக்கறிஞர்கள் யு.எம்.ரவிச்சந்திரன், வி.பி.ஆர்.இளம்பரிதி, குழந்தை வேல் ஆகியோர் நேற்று சென்று, மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:

தேர்தல் அதிகாரியிடம், பொய்யான மனுவை, சரத்குமார் தாக்கல் செய்துள்ளார். அ.தி.மு.க., உறுப்பினர் எனக் கூறி, அந்த கட்சிக்கான சின்னம் ஒதுக்கீட்டு படிவத்தை அளித்துள்ளார்.

ஏற்கனவே, சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அளித்த விண்ணப்பத்தின்படி, நட்சத்திர பேச்சாளராக, அவரை மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஏற்று கொண்டுள்ளார். அதில் இருந்து, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் உறுப்பினர் என்பது தெரிகிறது.தேர்தல் கமிஷனில் உள்ள ஆவணங்களை பார்க்கும் போது, சரத்குமார், அ.தி.மு.க., உறுப்பினர் அல்ல. அவர், சமத்துவ மக்கள் கட்சியின் உறுப்பினர். அ.தி.மு.க.,வால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் எனக்கூறி, படிவங்களை தாக்கல் 

செய்துள்ளார்.எனவே, அ.தி.மு.க., வேட்பாளராக சரத்குமாரை போட்டியிட அனுமதித்தால், அவரை, அ.தி.மு.க., உறுப்பினராக நம்புவதற்கு வழி வகுக்கும்.தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிவிக்கையை பரிசீலிக்க, தேர்தல் அதிகாரி தவறி விட்டார். வேட்புமனு தாக்கல் செய்த நாளில், சரத்குமார், பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் உறுப்பினர்.

தேர்தல் கமிஷன் வழிமுறைகளில், தேர்தலுக்காக கூட்டணி வைத்தாலும், அந்த பதிவு செய்யப்பட்ட அல்லது அங்கீகாரமுடைய அரசியல் கட்சிக்கு, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சின்னத்தை ஒதுக்கக் கூடாது என கூறப்பட்டு உள்ளது. எனவே, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும், சரத்குமாரின் வேட்பு மனுவை, நிராகரிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Comments