திருப்பம் : மநகூ - தேமுதிக தேர்தல் கூட்டணி

தினமலர் செய்தி : தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி விஷயத்தில் பல நாள் குழப்பத்திற்கு பின் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெளிவான முடிவெடுத்துள்ளார். மக்கள் நலக் கூட்டணி உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். இதனால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே, 16ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதற்காக மூன்று மாதங்களாக தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., - பா.ஜ., மற்றும் மக்கள் நலக் கூட்டணி தரப்பில் தீவிர பேச்சு நடத்தப்பட்டது. இந்தப் பேச்சை தே.மு.தி.க., தலைமை ரகசியமாகவும் வெளிப்படையாகவும் நடத்தி வந்தது.மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், விஜயகாந்த் வீட்டிற்கு சென்று 'பா.ஜ., கூட்டணியில் இணைய வேண்டும்' என வலியுறுத்தினார். மக்கள் நல கூட்டணி தலைவர்களும், இரு முறை விஜயகாந்தின் கட்சி அலுவலகம் சென்று தங்கள் கூட்டணியில் சேர வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதேநேரத்தில் தி.மு.க., தரப்பில் கூட்டணி தொடர்பாக ரகசிய பேச்சு நடத்தப்பட்டது.

இதனால் தேர்தல் என்றாலே முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் துவக்கி விடும் அ.தி.மு.க.,வும் இம்முறை நீண்ட யோசனையில் ஆழ்ந்தது. தே.மு.தி.க.,வை எப்படியும் தங்கள் கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என தீவிர அக்கறை காட்டிய தி.மு.க., தலைவர் கருணாநிதி இம்மாதம் 9ம் தேதி 'பழம் கனிந்து கொண்டிருக்கிறது; விரைவில் பாலில் விழும்' என பேட்டி அளித்தார். எனவே தி.மு.க., கூட்டணியில் நிச்சயம் தே.மு.தி.க., சேரும் என்ற செய்திகள் உலா வந்தன. ஆனால் 10ம் தேதி சென்னையில் நடந்த, தன் கட்சியின் மகளிர் தின விழா பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், தன் தலைமையில் புதிய அணியை அமைக்கப் போவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பின் மூலம் தி.மு.க., கூட்டணிக்கு அப்போதே தே.மு.தி.க.,வின் கதவு அடைக்கப்பட்டு விட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து பங்கேற்ற கூட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் தி.மு.க.,வை, விஜயகாந்தும், அவரின்மனைவி பிரேமலதாவும் கடுமையாக விமர்சித்து பேசி வந்தனர். இதையடுத்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் உற்சாகமாகி விஜயகாந்தை ரகசியமாக தொடர்பு கொண்டு பேசினர். இதனால் பா.ஜ., - தே.மு.தி.க., இடையேயான நெருக்கம் குறையத் துவங்கியது. ஒரு கட்டத்தில் பா.ஜ., தரப்பிடம் 'உங்களுடன் கூட்டணி இல்லை' என விஜயகாந்த் தெரிவித்து விட்டார். ஆனாலும் தங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் எப்படியும் வருவார் என்ற நம்பிக்கையில் பா.ஜ., தலைவர்கள் இருந்தனர்.

இதற்கிடையில் 21ம் தேதி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த கருணாநிதியும் 'தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணையும் என்ற நம்பிக்கை இருக்கிறது' என மீண்டும் தன் ஆசையை வெளிப்படுத்தினார். ஆனால் அதற்கு விஜயகாந்த் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் தரப்படவில்லை.இந்தச் சூழ்நிலையில் நேற்று முன்தினம் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடம் தொலைபேசியில் பேசிய விஜயகாந்த், 'தே.மு.தி.க.,வும், மக்கள் நலக் கூட்டணியும் தொகுதி உடன்பாடு செய்து தேர்தலை சந்திக்கலாம்; இதை நாளை அறிவிக்கலாம்' என தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.தி.க.,கூட்டணி அமைத்தது. இரு தரப்பினரும் தேர்தல் உடன்பாடும் செய்து கொண்டனர். அதன்படி தே.மு.தி.க., 124 தொகுதிகளிலும் மக்கள் நலக் கூட்டணி, 110 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவானது. மக்கள் நலக் கூட்டணி தலைவர்களும் விஜயகாந்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்மூலம் தேர்தல் கூட்டணி தொடர்பாக பல நாட்களாக நிலவி வந்த குழப்பத்திற்கு விஜயகாந்த் நேற்று தெளிவான முடிவெடுத்தார். அவரின் இந்த முடிவால் சட்டசபை தேர்தல் கூட்டணி விஷயத்தில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.

என்ன செய்யப்போகிறது பா.ஜ., - பா.ம.க.,?

தே.மு.தி.க.,வை தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக முயற்சித்த பா.ஜ., விஜயகாந்தின் முடிவால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.இருப்பினும் புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் சேர்ந்து தனித்தே தேர்தலை சந்திப்பது என தீர்மானித்து அதற்கான பணிகளில் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இந்த முடிவை அறிவிப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இன்று சென்னை வந்து கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதே போல பா.ம.க.,வும் தனித்தே போட்டியிடப் போவதாக அறிவித்து தங்கள் பாதையில் வேகமாக செல்லத் துவங்கி உள்ளது. இருப்பினும் பா.ஜ.,வையும், பா.ம.க.,வையும் ஒரே கூட்டணியில் கொண்டு வர இரண்டு தரப்பிலும் சிலர் முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., - மக்கள் நலக் கூட்டணி என ஐந்து அணிகள் சட்டசபை தேர்தலில் களம் காணும் நிலைமையும் முதல் முறையாக ஐந்து முனை போட்டியும் உருவாகி உள்ளது.

Comments