ஏரி திறப்பை எச்சரிக்காத அரசு நிர்வாகம் எல்லாம் காலியான பின் எட்டி பார்த்தனர்

தினமலர் செய்தி : கூவம், அடையாற்றில் அதிகரித்த நீர் அளவு குறித்து, கரையோர மக்களுக்கு அரசு நிர்வாகம் எச்சரிக்கை செய்யாமல் விட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால், வதந்திகள் பரவி மக்கள் பீதியடைந்தனர்.

செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து நேற்று முன்தினம் இரவில் எந்த அறிவிப்புமின்றி திறந்து விடப்பட்ட தண்ணீரால், சென்னை நகர் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. ஏரிகளிலிருந்து திறந்து விடப்பட்ட, ஒரு லட்சம் கனஅடி நீர், கூவம் மற்றும் அடையாற்றில் ஒரே நேரத்தில் பாய்ந்தபோது, ஆற்றங்கரை வாழ் மக்கள் திக்குமுக்காடினர்.நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, பல மடங்காக ஆற்றில் அதிகரித்த நீரின் அளவு குறித்து, குடியிருப்பு வாசிகளுக்கும், கரையோர மக்களுக்கும் முன்னெச்சரிக்கை செய்ய, மாநகராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுபோன்று, மொத்தமாக தண்ணீர் திறந்து விடும்போது, முதல் கட்டமாக, மின் வினியோகம் திடீரென நிறுத்தப்படும். அதன்படி, நேற்று முன்தினம் இரவில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதனால், மொபைல் போன் டவர்கள் இயங்காமல் சிக்னல் கிடைக்கவில்லை. 'டிவி' செய்திகள் வழியே தகவல் பெறவும் வழியில்லை.

இந்த நேரத்தில் வெள்ளம் வருவது குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் நீர்வரத்து குறித்து, நேரடியாக தண்டோரா மூலமோ, ஒலிபெருக்கி மூலமோ, நேரில் வந்து, மக்களை எச்சரிக்கை செய்து குடியிருப்பை காலி செய்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். மாறாக கரைப்பகுதிகளிலிருந்து, இரண்டு, மூன்று கிலோ மீட்டர் துாரங்களுக்கு வெள்ளம் பாய்ந்த பின்பே போலீசார் விழித்துக் கொண்டு, கரையோர மக்கள் குறித்து யோசிக்க ஆரம்பித்தனர்.

அதற்குள் பாய்ந்து வந்த வெள்ளத்தில் கட்டில், பீரோ, சிலிண்டர், வீட்டு 
உபயோக பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதுகுறித்து, சூளைமேடு, அமைந்தகரை, அண்ணா நகர், புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது, 'உடுத்திய உடையுடன் தப்பித்தோம், பிழைத்தோம் என சமூக நலக்கூடங்களையும், உயரமான இடங்களையும் தேடி வந்தோம்.

கட்சிக்காரர்கள் யாரும் எந்த உதவியும் செய்யவில்லை. போலீசார், மாநகராட்சியினர், எல்லாம் முடிந்த பின், தங்கிய இடங்களுக்கு வந்து பெயரை பதிவு செய்து கொண்டனர். எல்லாம் போன பின் பெயரை எழுதி என்ன செய்வது?' என்றனர்.

Comments