தினமலர் செய்தி : தூத்துக்குடி : தூத்துக்குடியில் டிச.,9முதல் 11வரை மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நவ., 23 ல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அதன் பின்பு பெரிய அளவில் மழை இல்லை. இருந்தாலும் வெள்ளம் புகுந்த பகுதிகளில் தற்போது வரை பல பகுதிகளில் வெள்ளம் வடியாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் பம்புசெட் மோட்டார் மூலம் தொடர்ந்து வெள்ள நீர் அகற்றப்பட்டு வருகிறது.
கனமழைக்கு வாய்ப்பு: நாளை மறுநாள் முதல் டிச.,11 ம் தேதி வரை திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந் நிலையில் மழை குறித்த மற்ற இணைய தளங்களில் காணப்படும் செயற்கைக்கோள் புகைப்படங்களில் மழைக்கான வாய்ப்பு இல்லை, என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ரவிக்குமார் தெரிவித்தாவது: கனமழையை எதிர்பார்த்து 62 முகாம்கள், கடலோர கிராமங்களில் 17 முகாம்கள், 5 சுனாமி ஷெல்டர்கள் ஆகிய இடங்களில் தயார் நிலையில் உள்ளனர். இதில் ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டா ல், ஜெனரேட்டர் வசதி முகாம்களில் செய்யப்பட்டுள்ளது.
தாமிரபரணி வெள்ளம்:தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீர் அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து வங்க கடலுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது. தாழ்வான பகுதிகளான புன்னகாயல், முக்காணி, சேர்ந்த பூமங்கலம் ஆகிய கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலுக்கு செல்ல வழியுள்ளது. ஆபத்து எதுவும் இல்லை.
குளங்கள் நிறைந்தது: தாமிரபரணி பாசன குளங்கள் 53ம் முழுமையாக நிரம்பியுள்ளது. கோரம்பள்ளம் பாசன குளங்கள் 54 ல் 41 குளங்கள் நிறைந்துள்ளது. 17 குளங்கள் நிறையும் நிலையில் உள்ளன. ஊராட்சிகளில் 403 குளங்களில் 213 குளங்கள் நிறைந்துள்ளன. 88 குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளன, என அவர் தெரிவித்தார்.
Comments