இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் சிறார் குற்றவாளி ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 20ம் தேதி தண்டனை முடிந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு மாணவியின் பெற்றோர், பெண்கள் அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விடுதலையை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், தற்போதுள்ள சிறார் சட்டப்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுவனுக்கு இக்குற்றத்திற்காக 3 ஆண்டுகள்தான் அதிகபட்ச தண்டனை தர முடியும் என்று கூறியிருந்தது. இந்த சூழலில் ராஜ்யசபாவில் இன்று பிற்பகல் சிறார் குற்றவாளிகள் சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சட்டத்தின் படி பலாத்காரம், கொலை போன்ற கொடிய குற்றங்களை செய்யும் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்களை போலவே விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்க வகை செய்யப்படும். இதனால் சிறார் குற்றவாளிகளுக்கு ஆயுள் மற்றும் மரணதண்டனை வரை விதிக்க வாய்ப்புள்ளது. லோக்சபாவில் நிறைவேறிவிட்ட இந்த சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேறுமா என்பது பற்றி நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. விவாதத்தில் பல கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களும் பேசினார்கள். அதிமுகவின் நவநீத கிருஷ்ணன் பேசுகையில், சிறார் குற்றவாளிகள் வயதை குறைப்பதில் தங்கள் கட்சிக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்தார். திமுகவின் கனிமொழி பேசுகையில், இச்சட்டத்திருத்தத்தை அவசர கதியில் நிறைவேற்ற வேண்டிய அவசியம் எழவில்லை. இன்னும் அதிமாக சட்டத்திருத்தம் பற்றி விவாதித்து, நிறைய விஷயங்களை ஆய்வு செய்து, பிறகு சட்டத்தை நிறைவேற்றலாம் என்று தெரிவித்தார். ஐக்கிய ஜனதாதளம் சார்பிலும், திமுகவை போன்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மம்தா பானர்ஜியின் திரினாமுல் காங்கிரசோ, இந்த நல்ல சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. காங்கிரசும் இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது.
Comments