சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இலவச பேருந்துகள் இயக்க வாய்ப்பில்லை:நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

It is not possible to run free buses from Chennai to outstation
OneIndia News : மதுரை: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இலவச பேருந்துகளை இயக்க வாய்ப்பு இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழைக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். சென்னை மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள தென் மாவட்ட மக்கள் உடமைகளை இழந்து, சொந்த ஊர்களுக்கு செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக அரசு இலவசமாக பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் கொண்ட அமர்வில், திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் முத்துக்கிருஷ்ணன், ராஜகோபால் ஆகியோர் ஆஜராகி, இலவச பேருந்துகளை இயக்குவது தொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அப்போது நீதிமன்றத்தில் இருந்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியனிடம், இது தொடர்பாக அரசிடம் தகவல் பெற்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு நீதிபதிகள் கூறினர். இந்நிலையில், நேற்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், சென்னை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப இலவசமாக பஸ் வசதி செய்ய வாய்ப்பில்லை. ஏற்கெனவே கடந்த 4 நாட்களாக சென்னை மாநகரில் அரசுப் பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் பயனடைந்தனர் என்றார். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக ரிட்மனு தாக்கல் செய்யுமாறு திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முத்துக்கிருஷ்ணன், ராஜகோபால் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments