தினமலர் செய்தி : சென்னை : டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் சென்னை, கடலூர், நாகை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. அனைத்து ஏரிகளும், குளங்களும், அணைகளும் நிரம்பியதால் பெருக்கெடுத்த வெள்ளம், மக்களின் இயல்பு வாழ்க்கையை மட்டுமின்றி, நகரத்தையே முற்றிலுமாக புரட்டிப் போட்டது. கடந்த 2 நாட்களாக மழை ஓய்வெடுத்ததால், வெள்ளநீர் வடித்து மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், அண்ணாசாலை, வடபழனி, கிண்டி, சூளைமேடு, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (09ம் தேதி) காலை முதல் மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளது. தாம்பரம், மேடவாக்கம், துரைப்பாக்கம், மாதவரம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. புழல்ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மீண்டும் மழை துவங்கியது. இதனால் பூண்டி, புழல், செம்பரபாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆவடி-பூந்தமல்லி பாலம் உடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் கண் எதிரிலேயே பாலம் இடிந்து விழுந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நாகை மாவட்டத்தில் இதுவரை பெய்த மழைக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். 1500 கால்நடைகள் பலியாகி உள்ளன.விடாமல் பெய்யும் மழையால் தேங்கிய மழைநீரின் அளவு அதிகரித்து வருவதால் 16 மீனவ கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 3 லட்சம் ஏக்கர் நிலங்களில் சம்பா நெற்பயிர் தண்ணீருக்குள் மூழ்கிப்போயுள்ளது. 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விளைந்த நெல் மணிகள், நீரில் மூழ்கி முளைவிட்டுள்ளன. இதே நிலைமை தான் திருவாரூர் மாவட்டத்திலும் நீடிக்கிறது.
Comments