அதிமுகவிற்கு ஓட்டு போடணும்... சத்தியம் கேட்ட கவுன்சிலர்: கடலூரில் மக்கள் கொதிப்பு

ADMK men gets promise from flood hit people for relief materialsOneIndia News : கடலூர்: நிவாரணப்பொருட்கள் தரவேண்டுமானால் அதிமுகவிற்கு ஓட்டு போடவேண்டும் என்று கடலூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் அதிமுகவினர் சத்தியம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் கொதிப்படைந்த பாதிக்கப்பட்ட மக்கள் கடலூரில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. அங்குள்ள ஆல்பேட்டையில், சேட்டு நகர், சேகர் நகர், முத்தையா நகர் போன்ற பல பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வெள்ள நிவாரணம் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். வெள்ள நிவாரணம் கேட்டு இன்று அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கடலூர்-பாண்டி சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறினார்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன் தலைமையிலான போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் மக்கள் பயந்து கொண்டு அலறியடித்தபடி அங்கும் இங்கும் என சிதறி ஓடியதால், அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.

கடலூர் நகராட்சியில் எட்டாவது வார்டில் ஆளுங்கட்சி கவுன்சிலராக இருக்கும் ரமேஷ் என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாங்கி வரும் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்காமல், அதிமுகவினருக்கு மட்டும் கொடுக்கிறார் என்பது மறியலில் ஈடுபட்டவர்களின் புகாராகும்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டால், வரும் தேர்தலில், அ.தி.மு.க.வுக்குதான் ஓட்டு போடுவேன்னு சத்தியம் பண்ணுங்க, உங்களுக்கு நிவாரண பொருட்களை கொடுக்கிறேன்' என்று மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். அப்பாவி மக்களிடம் சத்தியம் வாங்கிட்டு யாரோ கொடுத்த உதவி பொருட்களை கவுன்சிலர் கொடுக்கிறது மாதிரி கொடுக்கிறார்.

இதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தியதற்கு, போலீசைவிட்டு அடிக்கிறார். இவர் இப்படி செய்வதால், உண்மையாக கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோரும் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கின்றனர். அரசாங்கத்தில் இருந்து கொடுக்கலனாலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொடுக்க நினைக்கிறதை கூட மாவட்ட நிர்வாகம் கொடுக்கவிடவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆளுங்கட்சிக்காரர்கள் வழங்கும்போது, நிவாரண உதவிகளை பெறுபவர்களிடம் ரேஷன் அட்டையை வாங்கி அதில் சீல் குத்திவிடுகிறார்கள். அவர்கள் வழங்கும் நிவாரண பொருட்களில் வெறும் ஒரு சிறிய பிஸ்கட் பாக்கெட் மட்டும் வழங்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கிவிட்டதாக கூறி 'பெய்டு' என்ற சீலை குத்திவிடுகிறார்கள்.

இதனால், அரசாங்கம் பின்னாளில் கொடுக்கும் நிவாரணம் எங்களை போன்ற உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும் என்றும் இவர்கள் வேதனை தெரிவித்தனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து போயுள்ள மக்களுக்கு உணவு, நிவாரணம் வழங்குவதில் கூட அரசியல் செய்யலாமா என்று கேட்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Comments