இந்தியாவில் 'ஊதும்' ஆண்கள் குறைய, பெண்கள் அதிகரிப்பு

தினமலர் செய்தி : புதுடில்லி: கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பார்லி, யில் சுகாதாரத்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள புள்ளி விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 2012- 13 ம் ஆண்டில் சிகரெட் புகைப்போரின் எண்ணிக்கை 10 பில்லியனாக இருந்தது. இது, 2014 - 15ம் ஆண்டில் 9.32 பில்லியனாக குறைந்துள்ளது. இந்த கால கட்டத்தில் 1170 பில்லியனாக இருந்த சிகரெட் தயாரிப்பும் 1053 பில்லியனாக குறைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், உலக புகையிலை பயன்பாடு குறித்த ஆய்வில், 1980ம் ஆண்டில் 5.3 மில்லியனாக இருந்த புகைப்பிடிக்கும் இந்திய பெண்களின் எண்ணிக்கை 2012ல் 12.7 மில்லியனாக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

புகைப்பிடித்தலால் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் சிகரெட் பயன்படுத்தும் 187 நாடுகளில் 1980 முதல் 2012ம் ஆண்டு வரை ஆய்வு நடத்தப்பட்டது. இதில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிகமான பெண்கள் புகைப்பிடிக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. புகையிலை பாதிப்புக்கு அதிகமானவர்கள் ஆளாகி இருப்பதும் இந்தியாவில் தானாம். இந்தியாவில், சிகரெட் பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இதற்கு நேர்மாறாக சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதும் பல ஆய்வுகளில் உறுதியாகி உள்ளது.

Comments