திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலம் நிவாரண பொருட்கள் லாரிகள் மூலம் வந்து கொண்டு இருக்கையில், அதனை அதிமுகவினர் வழியில் நிறுத்தி பொருட்கள் உள்ள பையில் முதல்வர் ஜெயலலிதா படத்தை ஒட்டி அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது. இது கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
இந்த புகாரே ஓயாத நிலையில், தற்போது அரசு பேருந்துகளில் முன்புறம், பின்புறம் உள்ள கண்ணாடிகளில் முதல்வர் ஜெயலலிதா படம் ஒட்டி இருப்பது மேலும் பொதுமக்களை ஆவேசமடைய செய்துள்ளது.
சென்னையில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மக்கள் தவிக்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தான் இலவச பஸ்களை இயக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசோ அவர்களாகவே பேருந்துகளை இயக்குவது போல, பேருந்துகளில் உள்ள கண்ணாடிகளில் முதல்வர் ஜெயலலிதா படத்தை ஒட்டியுள்ளனர்.
கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநில அரசு அங்கிருந்து பேருந்துகளை தமிழகத்துக்கு அனுப்பி இலவசமாக அம்மாநிலங்களுக்கு ஏற்றிச் செல்கின்றனர். அதில் கர்நாடக முதல்வர் சித்தராமையவின் படமோ, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் படமோ, கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் படமோ இல்லை. ஆனால் தமிழக அரசோ இலவச பேருந்து என்ற பெயரில் பெரும்பாலான பேருந்துகளை நிறுத்தி வைத்து விட்டு, பெயருக்கு குறைந்த அளவு பேருந்துகளை இயக்கி வருவதோடு அதில் ஜெயலலிதா படத்தை வேறு ஒட்டி வெறுப்பேற்றி வருகிறது.
கோயம்பேடு, கிண்டி, வடபழனி, வேளச்சேரி உள்பட பல இடங்களில் பொதுமக்கள் பேருந்து வரவில்லை என நெடு நேரம் காத்திருந்து சாலை மறியல் கூட செய்து வருகின்றனர். சென்னையில் இருந்து வெளியேறி வரும் மக்கள் வெளியூர் செல்வதற்கும் பேருந்துகளை இலவசமாக இயக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Comments