இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம்ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், தமிழகத்தில் சென்னை மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் சென்றடையவில்லை. முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நிதிகள் குறித்து வெளிப்படை தன்மை இல்லாததால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நிவாரண நிதி அரசிடம் தரவில்லை.மாறாக நேரடியாக மக்களிடையே சென்று நிவாரண நிதி மற்றும் பொருள்களை அளித்து வருகின்றனர். வெள்ள நிவாரண விஷயத்தில் தமிழக அரசு தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. இந்தியாவிலேயே தமிழகம்தான் ஊழலில் முதல் மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் துறை வாரியாக நடந்த ஊழல் பட்டியலை ஜனவரி 1ம் தேதி முதல் வெளியிட உள்ளோம். வரும் சட்டசபை தேர்தலில் மக்களோடு கூட்டணி வைக்கப்போகிறோம். தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். 2016 சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார்.
இதனால் டில்லியை தொடர்ந்து ஆம்ஆத்மி கட்சியின் கவனம் தமிழகம் பக்கம் திரும்பி உள்ளது. இருப்பினும், தமிழக அரசியல் கட்சிகளின் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம், வெள்ள நிவாரண போராட்டம், தமிழக அரசு மீதான ஆம்ஆத்மியின் குற்றச்சாட்டு உள்ளிட்ட அனைத்தும் வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை குறிவைத்தே நடத்தப்படுவதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தமிழக தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டு வருவதும், தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதும் அரசியல் கட்சிகளின் அக்கறைக்கு முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது.
Comments