'சமீபத்தில் தமிழகத்தில், பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளத்துக்கு காரணம் என்ன?' என, தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி, மத்திய சுற்றுச்சூழல் வன அமைச்சர் ஜாவடேகரிடம் எழுத்துப்பூர்வமான கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு, பிரகாஷ் ஜாவடேகர் அளித்த பதில்: பூமி அறிவியல் ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியன, சென்னையில், சராசரிக்கு அதிகமான மழை பெய்யும்.- நீண்ட கால சராசரியை விட, 111 சதவீதம் கூடுதலாக மழை பெய்யும் என, முன்னறிவிப்பில் தெரிவித்திருந்தது. கூடுதலான மழை பெய்து, அதனால் ஏற்பட்ட நீர் பெருக்கால் வெள்ளம் ஏற்பட்டது. மூன்று நாட்களுக்கு முன்னதாக, வெள்ள அபாயத்தை ஒட்டி அவசர கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, அறிவுறுத்தி, உள்ளுர் அதிகாரிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நகரங்களிலும், தொழில் பகுதிகளிலும், வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு, முறையற்ற நகர்புற வளர்ச்சித் திட்டங்கள், கூடுதலான மக்கள்தொகை, கழிவுநீர் மற்றும் குப்பையை முறையற்ற வகையில் அகற்றியது, கரையோரங்களில் நில ஆக்கிரமிப்பு ஆகியவை, பருவ நிலை சாராத காரணங்களாகும். ஒரு சில அறிக்கைகளின் படி, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீரும், மழைநீரும் சேர்ந்து, அடையாறு மற்றும் அதன் கரையோரங்கள், வெள்ளத்தில் மூழ்க காரணமாக அமைந்தன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments