தினமலர் செய்தி : வெள்ள பாதிப்பு நீங்கியுள்ள நிலையில், கொசு உற்பத்தி மீண்டும் அதிகரித்து வருவதால், 'டெங்கு' காய்ச்சலின் தாக்கமும் துவங்கி உள்ளது. எனவே, தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், நவ., மாத இறுதியிலும், இம்மாதத்தின் துவக்கத்திலும், விடாது கொட்டி தீர்த்த கன மழையின் போது, காணாமல் போயிருந்த கொசுக்கள், மீண்டும், தலைதுாக்க துவங்கி விட்டன. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் பெருகி வருவதால், சென்னை உள்ளிட்ட வெள்ள பாதிப்பு மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் தாக்கம் துவங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள், அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அலைந்து திரிகின்றனர்; பலருக்கு, டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 'ஒரு வாரத்தில், டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதால், தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், சில நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அறிகுறிகள் என்னென்ன?
பகலில் கடிக்கும், 'ஏடிஸ்' வகை கொசுக்களால், டெங்கு காய்ச்சல் வருகிறது. மூன்று முதல், ஏழு நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும். அறிகுறி தென்பட்டால், மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.
பிற அறிகுறிகள்:
* திடீரென அதிக காய்ச்சல்
*கடும் தலைவலி, வயிற்று வலி
*கண்களை சுற்றி வலி; பார்வை திறன் குறைவு
*தசை, மூட்டு வலி, உடல் சோர்வு
*பசியின்மை, சுவை உணர்வு இழப்பு
*மார்பு, மேல் மூட்டுகளில் அரிப்பு
*குமட்டல், வாந்தி
*மூக்கு, ஈறுகளில் ரத்தம்
*மலச்சிக்கல்
*மூச்சு விடுவதில் சிரமம்
ஒத்துழைக்க வேண்டும்!
ஆங்காங்கே, ஒரு சிலருக்கு, டெங்கு பாதிப்பு உள்ளது. மழை விட்டதும், கொசு உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், கொசு ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகிறோம்; பொது மக்களும் விழிப்போடு இருக்க வேண்டும்.லேசான காய்ச்சல் இருந்தாலும், அரசு மருத்துவமனைக்கு சென்று, டாக்டரின் ஆலோசனை பெறுங்கள். தானாக, கடைகளில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிட வேண்டாம். மேலும், நன்னீரில் தான், டெங்கு காய்ச்சலுக்கான, 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாகும். வீட்டை சுற்றி, தேவையற்ற தண்ணீர் தேங்கும் பொருட்களை அகற்றி, மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
- சுகாதாரத்துறை அதிகாரிகள்
சத்துணவு ஊழியர் பலி :
'டெங்கு' காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி, சத்துணவு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த அஞ்சிபுத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு, 40; விவசாயி. இவர் மனைவி பத்மாவதி, 35, அங்குள்ள அரசு பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.இவருக்கு, கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் இருந்தது. இதற்காக, வேலுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு ரத்த பரிசோதனை செய்ததில், 'டெங்கு' மற்றும் 'டைபாய்டு' இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, வேலுார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பத்மாவதி சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, வேலுார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், நேற்று முன்தினம் இரவு, பத்மாவதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம், அஞ்சிபுத்துார் கிராமத்தில் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலுாரில் 10 பேர் பாதிப்பு?
வேலுார் மாவட்டத்தில், கடந்த, இரண்டு நாளில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என, 41 பேர், வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில், 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.
Comments