வெள்ளநிவாரணம்: சென்னை முகப்பேரில் சாலை மறியல்- அமைச்சர் ரமணாவின் கார் முற்றுகை

People Protest demanding flood relief for MugapperOneIndia News : சென்னை: வெள்ள நிவாரண கணக்கெடுப்பு பணியில் தங்கள் பகுதி புறக்கணிக்கப் படுவதாக கூறி முகப்பேர் பேருந்து நிலையம் அருகே நூற்றுக்கணக்கான மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற அமைச்சர் ரமணாவின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பல பகுதிகள் மூழ்கின. இதனையடுத்து நிவாரண பணிகளில் மாநகராட்சியினரும், வருவாய் அலுவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு வீடு இழந்தவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவித்தது. அதற்கான கணக்கெடுப்பு பணியில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலர்களும், ஊழியர்களும், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இதில் பல பகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக திமுகவினர் கவுன்சிலர்களாக உள்ள பகுதிகளில் சுகாதாரப்பணிகளோ, கணக்கெடுப்பு பணிகளோ நடைபெறுவதில்லை என்பது குற்றச்சாட்டாகும். இந்த நிலையில் முகப்பேர் பகுதிகளில் கழிவு நீரை அகற்றக்கோரி கடந்த வாரம் போராட்டம் நடத்திய மக்கள் இன்று வெள்ள நிவாரண கணக்கெடுப்பு பணிகளில் தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் ரமணாவின் காரை முற்றுகையிட்டு சிறை பிடித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அமைச்சரின் காரை மீட்டு அனுப்பிவைத்தனர். அப்போது அங்கு வந்த வட்டாட்சியர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ள நிவாரணம் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Comments