நிவாரணம்... நேரு விளையாட்டரங்கில் விடிய விடிய வேலை செய்யும் தன்னார்வலர்கள்

OneIndia News : சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு, குடிநீர் என நிவாரணங்கள் வழங்கி வருகிறது. இந்திய கப்பற்படையினைச் சேர்ந்த மூன்று கப்பல்கள் விசாகப் பட்டினத்திலிருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு வந்துள்ளன. அவை அனைத்தும் பெறப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் தனித்தனியாக பிரித்து வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பொதுமக்கள் உடைமைகள் உள்ளிட்டவற்றை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உணவு, உடைகள் இல்லாமல் அவதிப்பட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு, உடைகள் உள்ளிட்ட பொருள்களை விநியோகித்து வருகின்றனர். வெள்ள நீர் வடியாத பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்பு கொள்ள முடியாதவர்கள், நிவாரண உதவியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கானோருக்கு வழங்க பல்வேறு அமைப்புகளிடம் இருந்து நிவாரணப் பொருள்கள் குவிந்து வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் இந்த நிவாரணப் பொருள்களை தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் பிரித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் இடங்களுக்கு 30 லாரிகள் மூலம் ஞாயிற்றுக்கிழமை முதல் அனுப்பத் தொடங்கியுள்ளனர். மேலும், பல தொண்டு நிறுவனங்ளும், தனியார் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி உள்ளனர். பல தன்னார்வ அமைப்புகள் நிவாரணப் பொருட்கள் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன. அவ்வாறு நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புவோர், ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், இதற்கென ஏற்பட்டுத்தப்பட்டுள்ள மையத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வினியோகம் செய்ய தமிழக அரசிடம் வழங்கப்பட்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள 7-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அனுப்பியிருக்கும் நிவாரணப் பொருட்களின் விபரம் :

நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் 10 மெட்ரிக் டன் மேகி நூடுல்ஸ், 5 ஆயிரம் லிட்டர்கள் டெட்ரா பேக்கிங் செய்யப்பட்ட பால், 50 ஆயிரம் காபி பாக்கெட்டுகளை நிவாரண உதவிக்காக வழங்கியுள்ளது. மேலும், 25-30 மெட்ரிக் டன் நூடுல்ஸ்களையும், 8 மெட்ரிக் டன் மன்ச் மற்றும் 800 கிலோ சன்ரைஸ் பிஸ்கட்டுகளையும் வழங்க தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3,163 அட்டைப்பெட்டிகளில் பிஸ்கட்டுகளை 6 லாரிகளில் சென்னை வெள்ள நிவாரணத்திற்காக ஐ.டி.சி. நிறுவனம் அனுப்பியுள்ளது. எம்.டி.ஆர் நிறுவனம் 14,128 தயார் நிலை உணவுப் பொட்டலங்களை வெள்ள நிவாரணத்திற்காக வழங்கியுள்ளது. மேலும், 35 ஆயிரம் தயார் நிலை உணவுப் பொட்டலங்களை நாளை இரவிற்குள் வினியோகம் செய்யவும் முடிவு செய்துள்ளது.

345 அட்டைப்பெட்டிகளில் பிஸ்கட்டுகளை 3 லாரிகளில் பிரிட்டானியா நிறுவனம் இன்று அனுப்பியிருப்பதாகவும், மேலும் 2 லாரிகளில் உணவுப் பொருட்களை அனுப்ப தயாராகி வருவதாகவும் உணவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கோகோ கோலா நிறுவனம் 50 ஆயிரம் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்களையும், பெப்ஸிகோ நிறுவனம் 12 ஆயிரம் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்களையும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்லே நிறுவனம் 3 லாரிகளில் பிஸ்கட்டுகளை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரு விளையாட்டரங்கத்தில் நிவாரணப் பொருள்கள்: இந்த நிலையில் மத்திய அரசு நிறுவனங்கள், மாநில அரசு நிறுவனங்கள், பல்வேறு உணவுப் பொருள்கள் தயார் செய்யும் நிறுவனங்களில் இருந்து தயார் செய்த உணவு வகைகள், உடைகள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் குவிந்து வருகின்றன. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தப் பொருள்கள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதை தன்னார்வ இளைஞர்கள், சேவை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கான பால் பவுடர், ரொட்டி, குழந்தைகளுக்கான இனிப்பு பொருள்கள், தயார் செய்யப்பட்ட உணவுகள், புத்தாடைகள், படுக்கை விரிப்புகள், தண்ணீர் பாட்டில்கள், மருந்துப் பொருள்கள் உள்பட அனைத்துப் பொருள்கள் அடங்கிய சாக்குப் பைகளில் அடைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு வருகின்றன.

இதுவரையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், உணவுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவை மூலம் ஏராளமான லாரிகளில் பொருள்கள் வந்துள்ளன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான பொருள்களை சாக்குப் பைகளில் அடைக்கும் பணியில் 800க்கும் மேற்பட்ட தன்னார்வ இளைஞர்கள், 200க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை, சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

எந்தெந்தப் பகுதியிலிருந்து வாகனங்களில் என்னென்ன நிவாரணப் பொருள்கள் வந்துள்ளன உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் முறையாக அலுவலர்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே சேகரிக்கப்படுகின்றன. இந்த நிவாரணப் பொருள்களை மாநகராட்சியின் 54 பகுதிகளில் ஒவ்வொரு வீடு, வீடாகச் சென்று வழங்கப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த நிவாரண உதவி பணியானது பெரம்பூர், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, மெளலிவாக்கம், மணப்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களுக்கு 30 லாரிகளில் மொத்தம் 14,800 குடும்பத்தினருக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் 3 நாள்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு விடும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக பல்வேறு தரப்பினரும் வழங்கிய நிவாரண பொருள்கள் லாரிகள் மூலம் குவிந்து வருகின்றன. பல்வேறு அமைப்புகளிடமிருந்து 80 லாரிகளில் குவிந்துள்ள நிவாரணப் பொருள்களை இறக்குவதற்கு தன்னார்வலர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகளில் இருந்து நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்களை இந்த பணிக்கு அழைக்க உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Comments