சென்னை, அடையாறு, மத்திய கைலாஷ் பகுதியில் நேற்று நடந்த, விஜயகாந்த் கட்சியின் ரத்த தான முகாமுக்கு வந்திருந்த அவர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர், '2016ல் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்குமா?' என, கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜயகாந்த், ''அ.தி.முக., ஆட்சியை பிடிக்காது. இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்க முடியுமா? உங்களுக்கு அந்த தைரியம் இருக்கா?'' என கூறியவர், திடுமென, பத்திரிகையாளர்களை நோக்கி காரித் துப்பினார்.
இதனால், அங்கு கூடிய நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது தொடர்பாக, விஜயகாந்திடம் விளக்கம் கேட்க, பதில் எதுவும் கூறாமல், அங்கிருந்து அலட்சியமாக புறப்பட்டு சென்று விட்டார் அவர்.இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சங்கங்கள் விஜயகாந்தின் செயலை கண்டித்து, அறிக்கை விட்டுள்ளன. அடுத்த கட்டமாக, விஜயகாந்த் வீட்டு முன் போராட்டம் நடத்தவும் பத்திரிகையாளர் சங்கங்கள் தயாராகி வருகின்றன.
இது குறித்து சமூக ஆர்வலர் கண்ணன் கூறியதாவது: கடந்த, 2011 தேர்தலின் போது, தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் வேட்பாளர் பாஸ்கரை, தேர்தல் பிரசாரத்தின் போது, வேனில் வைத்து அடித்து, உதைத்தார். ஒரு மாதத்துக்கு முன், ரிஷிவந்தியம் தொகுதிக்கு சென்றிருந்த விஜயகாந்த், நிவாரணப் பொருட்களை வாங்க வந்திருந்த மக்கள் மத்தியில், அக்கட்சியின் பண்ருட்டி, எம்.எல்.ஏ.,வான சிவக்கொழுந்தை அடித்து, நொறுக்கினார். முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பிரதமரை சந்திக்க டில்லி சென்ற விஜயகாந்த், பிரதமரை சந்தித்துவிட்டு, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய போது, கேள்வி எழுப்பிய, 'ஜெயா' டிவி நிருபரை அடிக்கப் பாய்ந்தார். ஒவ்வொரு முறை வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும், விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கூடி, கேள்வி கேட்கும் போதெல்லாம், அவர்களை நோக்கி, நாக்கை துருத்தி, அடிக்கப் பாய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஜெயா டிவி நிருபரை அடிக்கப் பாய்ந்ததாக, அவர் மீதும், கட்சி எம்.எல்.ஏ.,வான அனகை முருகேசன் மீதும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.அது போல, மற்ற கட்சித் தலைவர்களை, கட்சி மேடைகள், பத்திரிகையாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட பொது இடங்களில் நாகரிகக் குறைவாக பேசுவதை, விஜயகாந்த் வாடிக்கையாக்கி கொண்டுள்ளார். இப்படி அவர் பேசிய பேச்சுகளுக்காக மட்டும் ஜெயலலிதா தரப்பில் பல அவதுாறு வழக்குகள் அவர் மீதும், அவர் மனைவி பிரேமலதா மீதும் போடப்பட்டுள்ளது.தன்னை, முதல்வர் வேட்பாளராகவும், தமிழகத்தின் அடுத்த முதல்வராகவும் நினைத்து அரசியல் செய்து வரும் ஒரு கட்சியின் தலைவரான விஜயகாந்த், இப்படி கீழ்த்தரமான காரியங்களை எத்தனை நாளைக்கு தொடருவார்?இந்த நிலையிலாவது இதற்கு முடிவு கட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்!
விஜயகாந்த் காரித் துப்பியது பத்திரிகையாளர்களை பார்த்து அல்ல; மாறாக, அனைத்து ஊடகங்களின்முகத்தில் என்றே கருதுகிறோம். விஜயகாந்த், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் என்பது வேதனைக்குரியது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் விஜயகாந்த், தன் செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; மன்னிப்பு கேட்காத வரை, அவர் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்.
- பாரதி தமிழன்,இணை செயலர், சென்னை பிரஸ் கிளப்
தொடரும் அநாகரிகம்!
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தன் நிலை மறந்து, பொது இடங்களில் நடந்து கொள்கிறார். ஊடகவியலாளர்களிடம் அவர் அநாகரிகமாக நடந்து கொள்வது தொடர்கதையாகி விட்ட நிலையில், காரித் துப்பும் அளவுக்கு, அவருக்கு துணிச்சல் வந்துள்ளது. அதனால், அவரை இனியும் சும்மா விடக்கூடாது; அவர் மன்னிப்பு கோரும் வரையில், அவருக்கு எதிராக பத்திரிகையாளர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்.
- வி.அன்பழகன்,
தலைவர், சென்னை பத்திரிகையாளர் சங்கம்
மன நிலை பாதிக்கப்பட்டவரா?
விஜயகாந்தின் செயல்பாடுகள், அவர் நல்ல மன நிலையில் தான் உள்ளாரா என, சந்தேகிக்க வைத்துள்ளது. எனவே, நல்ல மன நல நிபுணரை வைத்து, அவர் மன நிலையை சோதிக்க வேண்டும்.விஜயகாந்த், மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. காரணம், அவர் தன் வீட்டில் மிருகங்களை தான் வளர்க்கிறார். அதனால், அவருக்கு அந்த குணம் ஏற்பட்டு விட்டது என, நினைக்கிறேன்.ஊரையெல்லாம் திருடன் என பேசும் விஜயகாந்தின் ஒவ்வொரு நடத்தையும் எனக்குத் தெரியும். அவர் தொடர்ந்து இதே போல பேசிக் கொண்டிருந்தால், அவரின் கடந்த கால செயல்பாடுகள் அனைத்தையும் ஆதாரங்களுடன் விமர்சிக்க வேண்டியிருக்கும்.இப்படிப்பட்ட மனிதரை, அரசியல் ரீதியில் வளர்த்து விட்ட பாவத்தை, எந்த காரியம் செய்து துடைப்பது என, தேடிக் கொண்டிருக்கிறேன்.
சுந்தர்ராஜன்,
எம்.எல்.ஏ., - தே.மு.தி.க., அதிருப்தி
Comments