இழவு வீட்டில் விளம்பரம் தேட இப்ப வந்து ஒப்பாரி வைக்கும் வட இந்திய டிவிசேனல்கள்

North Indian Media's biased on TN FloodOneIndia News : சென்னை: இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தின் தலைநகரம் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த போது இதெல்லாம் ஒரு செய்தியா என ஏகடியம் பேசி கண்டும் காணாமல் இருந்த வட இந்திய ஊடகங்கள் இப்போது, இழவு வீட்டில் விளம்பரம் தேடுவதைப் போல ராணுவ ஹெலிகாப்டர்களில் ஏறிக் கொண்டு ஒப்பாரி வைக்கின்றன வட இந்திய தொலைக்காட்சிகள். தமிழகம் சார்ந்த எந்த ஒரு நிகழ்வானாலும் அதை புறக்கணிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றன வட இந்திய ஊடகங்கள். 700க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது வட இந்திய ஊடகங்களின் மனசாட்சியை உலுக்காது.. குஜராத்தின் ஒரு மீனவரை பாகிஸ்தான் கைது செய்தாலும் இந்தியா மீது போர் தொடுத்துவிட்டது போன்ற பில்டப்புகளுக்கு குறைச்சல் இருக்காது...

கடந்த மாதம் கடலூர் மாவட்டத்தை பெருவெள்ளம் புரட்டிப் போட்டது... இப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.. சென்னை மாநகரமே வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்பட்டதில்லை வட இந்திய ஊடகங்கள். இந்த வட இந்திய ஊடகங்களிலேயே இந்தியா டுடே குழுமமும் அதன் தலைமை செய்தி ஆசிரியருமாகிய ராஜ்தீப்சர்தேசாய்தான் மனசாட்சியுடன் நடந்து கொண்டு சென்னை வெள்ள பாதிப்பை முழுமையாக பதிவு செய்து வந்தார். டைம்ஸ் நவ் உள்ளிட்ட வட இந்திய தொலைக்காட்சிகள் யாருமே சென்னையின் துயரத்தை பதிவு செய்யக் கூட மனமற்ற இரக்கமற்றவர்களாகத்தான் இருந்தார்கள். இதனால்தான் வட இந்திய டிவி சேனல்களை நேஷனல் நியூஸ் சேனல்கள் அல்ல.. வட இந்திய சேனல்கள் என்கிற வெறித்தனத்தைக் காட்டிவிட்டதாக சமூக வலைதளவாசிகள் வெளுத்து வாங்கியிருந்தனர். இந்நிலையில் முப்படையும் மீட்புப் பணியில் குதித்து வருகிறது. இந்த முப்படையின் பி.ஆர்.ஓ.க்கள் வட இந்தியர்கள் என்பதால் அவர்களைப் பயன்படுத்தி ராணுவ ஹெலிகாப்டர்களில் ஏறி அமர்ந்து கொண்டு 'இதோ நாங்களும் இந்த பேரவலத்தைக் காட்டுகிறோம்' என்று இன்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் வரவில்லை என யார் அழுதது? எழவு வீட்டில் பிரேதம் இருக்கும் போது ஒப்பாரி வைக்க வரமுடியாதுன்னு திமிரா இருந்துவிட்டு சொத்து கிடைக்கும் என்பதற்காக 31-வது நாள் வந்து ஒப்பாரி வைத்தவன் கதையாக விளம்பர வெறிக்காக இந்த வட இந்திய ஊடகங்கள் சென்னைக்குள் படையெடுத்திருக்கின்றன. கூவி கூவி இதோ.. அதோ... வெள்ள பாதிப்பை காட்டுகிறார்கள்... நீங்கள் காட்டுவதை விட தமிழக ஊடகங்கள் நிறையவே செய்துவிட்டன... நீங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டு அந்த ஹெலிகாப்டர், விமானத்திலேயே மும்பைக்கும் டெல்லிக்கும் ஓடிவிடுவதான் நல்லது.. அத்தகைய "வெறுப்பு"வெறியில் இருக்கிறார்கள் தமிழர்கள்....

Comments