சிறார் குற்றவாளிகள் சட்டத்திருத்தம் ராஜ்யசபாவில் தாக்கல்.. அனல் பறக்கும் விவாதம்

Juvenile Justice Bill sumbitted in RajyasabhaOneIndia News : டெல்லி: சிறார் குற்றவாளிகள் சட்ட திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா (உண்மையான பெயர் ஜோதி சிங்) 6 பேர் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் சிறார் குற்றவாளி ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 20ம் தேதி தண்டனை முடிந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு மாணவியின் பெற்றோர், பெண்கள் அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விடுதலையை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், தற்போதுள்ள சிறார் சட்டப்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுவனுக்கு இக்குற்றத்திற்காக 3 ஆண்டுகள்தான் அதிகபட்ச தண்டனை தர முடியும் என்று கூறியிருந்தது. இந்த சூழலில் ராஜ்யசபாவில் இன்று பிற்பகல் சிறார் குற்றவாளிகள் சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே லோக்சபாவில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளியால் ராஜ்யசபாவில் இச்சட்டம் உட்பட மேலும் பல சட்டங்கள் 6 மாதங்களாக நிலுவையில் இருந்தன. இந்நிலையில்தான், இன்று இச்சட்ட மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி பலாத்காரம், கொலை போன்ற கொடிய குற்றங்களை செய்யும் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்களை போலவே விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்க வகை செய்யப்படும். இதனால் சிறார் குற்றவாளிகளுக்கு ஆயுள் மற்றும் மரணதண்டனை வரை விதிக்க வாய்ப்புள்ளது. இந்த சட்டத் திருத்தம் நிறைவேறுமா என்பது பற்றி நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் மற்றும், தாய் ஆஷா தேவி ஆகியோரும், ராஜ்யசபாவில் பொதுமக்கள் மாடத்தில் அமர்ந்தபடி, விவாதத்தை கேட்டுக்கொண்டிருந்தனர். விவாதத்தில் பல கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களும் பேசிவருகிறார்கள். இன்று மாலைக்குள் சட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரசும் இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதில் அரசுக்கு இடைஞ்சல் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

Comments