மக்கள் கொந்தளிப்பு: ஜெ. தொகுதியில் "நத்தம்" உட்பட அமைச்சர்கள் ஓட்டம்! அதிமுக செயலருக்கு சரமாரி அடி!!

North Chennai People anger over TN MinistersOneIndia News : சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் மழைவெள்ளத்தில் சிக்கிய தங்களை உடனே மீட்காதது ஏன் என பொதுமக்கள் கொந்தளித்ததால் எந்த நேரத்திலும் தாக்கப்படக் கூடும் என அஞ்சி அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, செல்லூர் ராஜூ ஆகியோர் தப்பி ஓடியிருக்கின்றனர். புழல் ஏரியில் அதிக அளவு திறந்துவிடப்பட்டதால் வடசென்னை முழுவதுமே வெள்ளக்காடாக காட்சி தருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டுவிட்டு 'அகதி'களைப் போல வெளியேறி வருகின்றனர். தென்சென்னையில் மேற்கொண்டதைப் போல முழு அளவில் மீட்புப் பணிகள் தங்களது பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை என்ற கொந்தளிப்பில் அப்பகுதி மக்கள் இருந்து வந்தனர்.

இந்நிலையில் வடசென்னையில் முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர்.கே.நகரில் வெள்ள நிலைமையைப் பார்வையிட அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, செல்லூர் ராஜூ ஆகியொர் சென்றனர். பெரும் கொந்தளிப்பில் இருந்த மக்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டனர். இதனால் காரில் அமர்ந்தபடியே அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலளித்திருக்கிறார். நாங்கள் எல்லாம் தண்ணியில்தான் நிற்கிறோம்.. வயசானவங்களே தண்ணியில மிதக்கிறோம்.... நீங்களும் இறங்குங்க.. என எகிறியிருக்கிறார்கள். இதனால் காரைவிட்டு நத்தம் விஸ்வநாதன் கீழே இறங்க வேண்டியதாயிற்று. அப்போது, ஏன் உடனே எங்களை பார்க்க வரவில்லை என்று அதிமுகவின் மாவட்ட செயலாளரான வெற்றிவேலுடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்தனர். இதற்கு பதிலாக வெற்றிவேலும் எகிற கை கலப்பானது. வெற்றிவேலை அப்பகுதி மக்கள் சரமாரியாகத் தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர்கள், எங்கே மக்கள் தங்களையும் புரட்டி எடுத்துவிடுவார்களோ என அஞ்சி காரில் ஏறி தப்பி ஓடிவிட்டனர். பாடியில் போராட்டம் இதேபோல் சென்னை பாடி பகுதியில் மின்சாரம் வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட்டது.

Comments