தினமலர் செய்தி : சென்னை: முதல்வர் ஜெயலலிதா, மழை வெள்ளம் குறித்து முதல் முறையாக வாட்ஸ் அப்பில் குரலை (ஆடியோ மட்டும்) பதிவு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: கடந்த நூறு ஆண்டுகள் கண்டிராத பெரும் மழை ஏற்படுத்திய வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரங்களை நினைத்து நான் வருந்துகிறேன். கவலை வேண்டாம். இது உங்கள் அரசு. எதையும் எதிர் கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள். உங்களுக்காக நான், உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன். விரைவில் இப் பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் புணரமைப்புப் பணிகளையும் முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறேன். அமைச்சர்களும், அரசு அலுவலர்களும், காவல் துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும், முப்படையினரும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மற்றும் தன்னார்வத் தொண்டர்களும் அயராது தோளோடு தோள் சேர்ந்து உங்களுடன் அயராது உழைத்தார்கள்.
உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கென்று தனி வாழ்க்கைக் கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான். என் பெற்றோர் வைத்த ஜெயலலிதா என்ற பெயரை மறந்து போகும் அளவுக்கு, நீங்கள் அழைக்கின்ற அம்மா என்கின்ற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அற்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த அரசு இயற்கைப் பேரிடர்களை வெற்றி கொள்வதில் எப்போதும் பெயர் பெற்ற அரசு என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். நன்றி! -இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.
முதன்முறை:
நாட்டில் பல்வேறு கட்சி தலைவர்களும் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படுகின்றனர். வட இந்திய தலைவர்கள் இதில் மிக பிரசித்தம். தமிழகத்தில் கருணாநிதி, ஸ்டாலின், ராமதாஸ், அன்புமணி, பாஜ தலைவர்களும் ஓரளவு செயல்படுகின்றனர்.
ஆனால் இதுவரை ஜெயலலிதா எந்த சமூகவலை தளத்திலும் செயல்படவில்லை. இப்போது தான் முதன்முறையாக வாட்ஸ்அப்பில் வலம் வருகிறார். நவீன தகவல் தொடர்பு சாதனத்திற்கு அவரும் மாறுவதையே இது காட்டுகிறது.
Comments