கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மொபைல் போன்களை சார்ஜ் செய்ய முடியாததால், யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால், அடுக்குமாடி குடியிருப்புக்களில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கி உள்ளனர்.
போக்குவரத்து நிறுத்தம் : அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, அடையாறு குறுக்கே செல்லும் பாலங்களின் மேல் நீர் செல்கிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை- சைதாப்பேட்டை இடையேயான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அடையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கோட்டூர்புரத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால், அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.
பஸ்கள் நிறுத்தம் : சென்னையில் பெரும்பாலான சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மினி பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வடபழனி-கோயம்பேடு இடையேயான சாலையில் 3 அடிக்கும் அதிகமாக தண்ணீர் தேங்கி உள்ளதால் அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. சாலையில் மரம் விழுந்துள்ளதால் கவர்னர் மாளிகை-வேளச்சேரி இடையே சாலை போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கனமழை காரணமாக 17 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
ரயில்கள் ரத்து : கனமழையால் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னைக்கு வரும் ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னைக்கு வரும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வடக்கு நோக்கிச் செல்லும் பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு வருகின்றன. இதனால் மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் ரத்து : விமான நிலைய ஓடு பாதையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி இருப்பதால் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமானங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. கோவையில் இருந்து சென்னை வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஓடு பாதையில் தேங்கி இருக்கும் நீரை வெளியேற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
அவசர எண்கள் அறிவிப்பு : வெள்ளம் பாதித்த பகுதிகளில் தவிக்கும் மக்கள் குறித்து தகவல் தெரிவிக்க ஒவ்வொரு பகுதிக்கும் அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவெற்றியூர் - 9445190001, மணலி - 9445190002; தேனாம்பேட்டை - 9445190009, மாதவரம் - 9445190003, ஆலந்தூர் - 9445190012,அடையாறு - 9445190013, அண்ணாநகர் - 9445190008, ராணுவம் - 98402951003, வெள்ள மீட்பு கட்டுப்பாட்டு அறை - 044-28593990, 28410577, 9445869843, 9445869847.
மீட்புப் பணியில் ராணுவம் : கனமழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ராணுவம் மற்றும் கடற்படை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 4 தேசிய பேரிடர் மீட்புக் குழு ஏற்கனவே மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மேலும் 6 குழுக்கள் வரவழைக்கப்பட உள்ளன. ஹெலிகாப்டர் மூலமும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டல்கள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
Comments