தினமலர் செய்தி : அடையாற்றில், வெள்ளம் அதிகரித்த போது, கரை ஓரப் பகுதிக்கு மட்டுமே போலீசார் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், கரையின் இருபுறத்திலும், ஒரு கி.மீ., துாரத்திற்குள் வசித்தோருக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில், கடந்த நவ., ௩௦ம் தேதி முதல் வெள்ளம் அதிகரிக்கத் துவங்கியது. கடந்த, ௧ம் தேதி இரவு, 7:௦௦ மணிக்கு, கரை ஓரம் வசித்த, மணப்பாக்கம், நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பகுதிவாசிகளை, வீடுகளை விட்டு வெளியேறும்படி, போலீசார் அறிவிப்பு கொடுத்து உள்ளனர்.அப்போதே, வெள்ளம் தெருக்களுக்குள் புக துவங்கி விட்டது. எனினும், பெரிய அளவில் வெள்ளம் வந்துவிடாது என்ற அசட்டு நம்பிக்கையில் பலர் வீடுகளுக்கு உள்ளேயே இருந்தனர்.ஒரு கட்டத்தில், வெள்ளத்தின் மட்டம் உயரத் துவங்கியதும், வீட்டுப் பொருட்களை பாதுகாக்க முடியாமல், கையில் கிடைத்த ஒரு சில பொருட்களுடன், தரைத் தளத்தில் வசித்தோரில் சிலர், வீட்டைவிட்டு வெளியேறினர்; பலர், மாடிக்கு சென்றனர்.
சைதாப்பேட்டை, செட்டித்தோட்டம் பகுதிவாசிகள் கூறியதாவது: கனமழை பெய்த, ௧ம் தேதி மதியமே வெள்ளம் புகுந்துவிடுமோ என்ற பயம் இருந்தது. எப்போதும் போல், வீட்டுப்படி வரை வரும் என, நினைத்தோம். அன்று இரவு, 7:00 மணிக்கு, போலீசார் வந்து எச்சரிக்கை விடுத்த போது தான், ஆபத்தை உணர்ந்தோம். சில பொருட்களுடன் வெளியேறி, ஒரு கி.மீ., துாரம் நடந்து சென்று, மேற்கு சைதாப்பேட்டையில், திக்கு திசை தெரியாமல் நின்றோம். சிலர்,
உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.கடந்த, 1ம் தேதி இரவு முழுவதும், பூட்டிய கடை வாசலில் அமர்ந்திருந்தோம். மறுநாள் தான், அதிகாரிகள் வந்து நிவாரண முகாமில் தங்க வைத்தனர். மதியமே வெளியேறும்படி கூறி இருந்தால், வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்களை மீட்டிருப்போம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இவர்கள் நிலைமை இப்படி இருக்க, அடையாற்றின் இருகரையிலும் இருந்து ஒரு கி.மீ., சுற்றுவட்டாரத்தில் வசித்தோருக்கு, 1ம் தேதி இரவு 12:00 மணி வரை, போலீசாரோ, அதிகாரிகளோ தகவல் தெரிவிக்கவில்லை. அசந்து துாங்கி கொண்டிருந்தவர்களை வெள்ளம் தான் தொட்டு எழுப்பியது. அதன்பின்பே நிலைமையின் விபரீதம் அனைவருக்கும் புரிந்தது.
சைதாப்பேட்டை, நீதிமன்றத்தின் பின்னால் உள்ள, ஸ்ரீநகரில் நான்கு தெருக்கள் உள்ளன. சத்தியா நகர் வழியாக சென்ற வெள்ளம், நான்கு தெருக்களிலும் புகுந்து, குடியிருப்புகளை பத்தடி உயர வெள்ளத்தில் மூழ்கடித்தது.
அவஸ்தைப்படுகிறோம்:
ஸ்ரீநகரைச் சேர்ந்த, ௮௮ வயது ஜீலாசந்திரன் அந்த சம்பவம் குறித்து, பதறியபடியே கூறியதாவது:மழையும், குளிருமாக இருந்தால், அசந்து துாங்கிவிட்டோம். கடந்த, ௧ம் தேதி இரவு, 12:௦௦ மணியளவில், போர்த்திய போர்வை திடீரென நனைந்தது. விழித்து பார்த்தபோது, வீட்டிற்குள் வெள்ளம் வேகமாக வந்து கொண்டிருந்தது. வெளியேறவும் முடியாமல், பொருட்களை பாதுகாக்கவும் முடியாமல், மாடிக்கு சென்றுவிட்டோம்.நள்ளிரவு 1:00 மணியளவில், தரைத் தள வீடு முழ்கி விட்டது. மின்சாரம், அலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது. மூன்று நாட்கள் வரை வெள்ளம் நின்றது. அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ, எங்கள் பகுதியை எட்டிப்பார்க்கவில்லை. உறவினர்கள் தான், பால், ரொட்டி, குடிநீர் கொண்டு வந்து கொடுத்தனர். எங்கள் பகுதியில் முன்னறிவிப்பு செய்திருந்தால், எச்சரிக்கையாக வீட்டை காலி செய்து வெளியேறி இருப்போம்; இவ்வளவு அவஸ்தைப் பட்டிருக்க மாட்டோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அடையாற்றங்கரைக்கு நெருக்கமாக உள்ள குடிசைப் பகுதிகளில் மட்டும் எச்சரிக்கை விடுத்த போலீசாருக்கு, வெள்ளம் எவ்வளவு வரும் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்ததா; அல்லது தெரிவிக்கப்பட்டிருந்ததா; அப்படி எனில், அந்த எச்சரிக்கை மற்ற பகுதிகளுக்கும் விடுக்கப்படாதது ஏன்?
Comments