காத்திருப்பு... உயர் அதிகாரிகளை பலிகடாவாக்கி, பிரச்னையை மூடி மறைக்கும் முயற்சி...

Dinamalar Banner Tamil Newsதினமலர் செய்தி : புதிய பஸ் இயக்கம் முதல், திறப்பு விழா வரை எல்லா விஷயங்களுக்கும், மேலிட ஒப்புதலுக்கு அதிகாரிகள் காத்திருக்க வேண்டும் என்ற வேலை கலாசார மாற்றம், அரசு வட்டாரத்தில் ஆழமாக வேரூன்றி விட்டது. செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தாமதமானதற்கும், சென்னை வெள்ளக்காடாக மாறியதற்கும், இதுவே காரணமாகி விட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் இரண்டு உயர் அதிகாரிகளை பலிகடாவாக்கி, பிரச்னையை மூடி மறைக்கும் முயற்சி நடப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

கொட்டி தீர்த்த கன மழை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் தத்தளித்தன. வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு, டிச., 1ம் தேதி இரவு முதல், டிச., 2 அதிகாலைக்குள், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, மிக அதிகபட்ச அளவில், உபரி நீர் வெளியேற்றப்பட்டதே காரணம் என, புகார் எழுந்தது.நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவை விட, அதிகமாக தண்ணீர் வரும் என்பதை முன்கூட்டியே கணக்கிட்டு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால், இந்த பேரிடரை தவிர்த்து இருக்கலாம்.

ஜெயலலிதா அறிக்கை:

இது தொடர்பாக, டிச., 1ல், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நவ., 30ம் தேதி இரவு முதல், கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார் மற்றும் சென்னை மாவட்டங்களில், டிச., 1ம் தேதியும் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய அறிக்கையில், டிச., 1 மற்றும், டிச., 2ம் தேதி, வட கடலோர மாவட்டங்களில், கன மழை மற்றும் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றை, நான், டிச., 1ம் தேதி, தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். சென்னை, திருவள்ளூர், கடலுார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை, அமைச்சர்கள் மேற்பார்வையிட ஆணையிட்டுள்ளேன். சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய நீர்த்தேக்கங்களில், மொத்த கொள்ளளவில், 83.8 சதவீதம் நிரம்பியுள்ளது. ஏரிகளின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் திறந்து விடப்படுகிறது. மேலும், தமிழகத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 89 பெரிய நீர்த்தேக்கங்களில், 45ல் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் திறந்து விடப்படும்போது, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறும், நான்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சந்தேகம் :

இது குறித்து, ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா, ஆய்வு கூட்டம் நடத்தி, இத்தகைய அறிக்கை வெளியிட்ட, அடுத்த சில மணி நேரத்தில், செம்பரம்பாக்கம் ஏரியில், மிக அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அப்படியானால், முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்துக்கு, செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்த விவரங்களை, பொதுப்பணித் துறை அனுப்பியதா, அதுகுறித்து விவாதிக்கப்பட்டதா என்ற, கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணை:

இப்பிரச்னை தொடர்பாக, பொதுப்பணித் துறை செயலர் பழனியப்பன், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் திருமாறன், சென்னை மண்டல தலைமை பொறியாளர் சண்முகம், அணைகள் பாதுகாப்பு இயக்க தலைமை பொறியாளர் கலீல் அகமது ஆகியோரிடம், தலைமைச் செயலர் ஞானதேசிகன், இரண்டு நாட்களாக விசாரணை நடத்தியுள்ளார். மேலும், இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து விளக்கம் கேட்கப்பட்டது. அவர்களும் விளக்கம் அளித்துள்ள நிலையில், நீர்வளத் துறை முதன்மை தலைமை பொறியாளர் திருமாறன், சென்னை மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் சண்முகம் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக, பொதுப்பணித் துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து திருமாறனிடம் கேட்டபோது,''கடலுார் வெள்ளப் பாதிப்பு ஆய்வுப் பணியில் இருக்கிறேன்,'' என்றார். சண்முகத்திடம் கேட்டபோது, ''தலைமைச் செயலகத்தில் நடக்கும் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறேன்,'' என தெரிவித்தார். ஆனால், இரண்டு பேரும், இரண்டு நாட்களாக தங்கள் அலுவலகங்களுக்கு வரவில்லை என, பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

காத்திருப்பு:

* 'ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்' என்ற, முதல்வரின் அறிக்கைக்கும், 'பொதுப்பணித் துறை அதிகாரிகள் அரசின் அனுமதிக்காக காத்திருந்தோம்' என்று கூறுவதற்கும் இடையிலான முரண்பாடு, பல சந்தேகங்களை எழுப்புகிறது.
* முதல்வருக்கு ஏரியின் நிலவரம் மறைக்கப்பட்டதா அல்லது, ஒவ்வொரு கட்டத்திலும், உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்கும் வேலை கலாசார மாற்றம் காரணமாக, சென்னை மக்கள் வெள்ளத்தில் தள்ளப்பட்டனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
'தமிழகத்தில், ஒரு திறப்பு விழாவிற்கு கூட, மேலிட அனுமதி பெற வேண்டும் என்ற வேலை கலாசாரம் வேரூன்றி விட்டது. இது தான், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விஷயத்திலும் எதிரொலித்துள்ளது. இதை மூடி மறைக்க, இரண்டு உயர் அதிகாரிகளை மட்டும், 'சஸ்பெண்ட்' என்ற பெயரில், பலிகடா ஆக்குவது, எந்த விதத்திலும் நியாயம் இல்லை' என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளுக்கு அனுபவம் இல்லை!

இது குறித்து, முன்னாள் பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:'சென்னையில், 50 செ.மீ., வரை மழை பெய்யும்' என, வானிலை மையம் முன்கூட்டியே எச்சரித்தும், பொதுப்பணித் துறை அதிகாரிகள், வெள்ள ஒழுங்குமுறை குறித்த போதிய அனுபவ அறிவு இல்லாதவர்களாக இருந்ததால், இந்த பேரிடர் ஏற்பட்டது.ஒரு நோயாளிக்கு உடனடி சிகிச்சை தேவைப்படும் போது, தலைமைச் செயலர், முதல்வரிடம் அனுமதி பெற வேண்டும் என்று இருப்பது தேவையற்ற ஒன்று.ஏரியின் கொள்ளளவு, கரை ஓரத்தின் உயரம், கொள்ளளவு ஆகியவற்றின் அடிப்படையில், நீரியல் அறிவுடன் பொதுப்பணித் துறை அதிகாரிகள் செயல்பட்டு இருக்க வேண்டும்.அதை விடுத்து, தலைமைச் செயலர் அனுமதி, முதல்வரின் அனுமதி என, காலம் கடத்துவது, அவர்களுக்கு அத்துறை பற்றிய அனுபவ அறிவு இல்லாததையே காட்டுகிறது. தற்போது, நீர் வளத்துறையில் இருக்கும் பெரும்பாலான அதிகாரிகள், பணி காலம் முழுவதும், கட்டுமானப் பிரிவில் இருந்து விட்டு, கடைசி சமயத்தில், இப்பிரிவில் உயர் பதவிகளை பிடித்து உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments