ஹெலிகாப்டரில் இருந்து உணவு பொட்டலம் வீசும் ராணுவம்.. மொட்டை மாடியில் நின்று கையேந்தும் மக்கள்

Embedded image permalinkOneIndia News : சென்னை: வெள்ளத்தில் சிக்கி, உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு இந்திய ராணுவம், ஹெலிகாப்டர்கள் மூலம், உணவு பொட்டலத்தை வழங்கி வருகிறது. உணவுக்காக ஏங்கி மக்கள் மொட்டை மாடிகளில் கையேந்தி நிற்பது பரிதாபத்தை வரவழைப்பதாக உள்ளது. வெள்ளத்தில் சிக்கிய சென்னைவாசிகளுக்கு உதவி செய்ய, அவர்களை மீட்க, நேற்று ராணுவத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. கப்பலில், மீட்பு பணிக்கு தேவையான பொருட்களுடன், இன்று காலை கடற்படையினர் சென்னை துறைமுகத்திற்கு வந்தனர். விமானப்படை சார்பில் 5க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டது. இதில், இன்று, 2 ஹெலிகாப்டர்கள் மூலம், நகரின் பல பகுதிகளில் ஆய்வு செய்து, எங்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்களோ, அங்கு உணவு பொட்டலங்களை வீசி வருகின்றனர்.

Embedded image permalinkதண்ணீர் சூழ்ந்து, வீடுகள் தனித்தனி தீவுகளாக மாறிவிட்டதால், உணவு கிடைக்காமல் அவதிப்படும், மக்கள், தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் குவிந்துள்ளனர். அங்கிருந்து ஹெலிகாப்டர்களை நோக்கி கையசைக்கிறார்கள். அவர்களை நோக்கி, உணவு பொட்டலங்களை ராணுவத்தினர் வீசுகின்றனர். அதை பிடிக்க மக்கள் போட்டா போட்டி போடுகின்றனர். உணவு தங்களுக்கு போதுமோ இல்லையோ என்ற அச்சத்தால், ஒவ்வொருவருமே, பொட்டலத்திற்கு போட்டி போடுகிறார்கள். சிலர், கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு மொட்டைமாடியில் நின்று உணவு கேட்டு கையசைக்கிறார்கள். அந்த பகுதிகளில் அதிக உணவு பொட்டலங்களை ராணுவத்தினர் வீசுகின்றனர். உணவு பொட்டலத்தோடு, குடிநீர் பாட்டில்களும் வைக்கப்பட்டுள்ளன. உணவு கேட்டு, மக்களை வானை பார்த்து கையசைக்கும் காட்சி, கைக்குழந்தைகளோடு தூரலுக்கு நடுவே, மொட்டை மாடியில் உணவுக்காக காத்திருக்கும் காட்சி பரிதாபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

Comments