நிவாரண உதவிகள் வழங்குவதில் ஒருங்கிணைப்பு இல்லை: தலைமை நீதிபதி கவலை

தினமலர் செய்தி : சென்னை : 'மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில், மத்திய, மாநில அரசுகள், தன்னார்வ அமைப்புகளிடம் ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லை' என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்., கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனு:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க, நிவாரண பொருட்களை, தன்னார்வ அமைப்புகள், தனி நபர்கள் வழங்குகின்றனர். இவற்றை சேகரித்து பாதிக்கப்பட்டோருக்கு கொண்டு சேர்க்க கீழ் மட்டத்தில் அரசு துறைகள் செயல்படவில்லை. மத்திய ஏஜன்சிகள், தன்னார்வ அமைப்புக்களை ஒருங்கிணைக்க முடியாமல் உள்ளனர். நிவாரண பொருட்களை யாரிடம் கொடுப்பது, எங்கே கொடுப்பது என தெரியாமல் உள்ளனர். எனவே தன்னார்வலர்களுடன் ஒருங்கிணைந்து நிவாரண உதவிகளை வழங்க அதிகாரிகள் அடங்கிய குழுவை அரசு நியமிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இம்மனுவை முதலில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். அரசு தரப்பில் மேற்கொண்டுள்ள நிவாரண நடவடிக்கைகளை விரிவாக தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். பின் இது பொது நல வழக்காக இருப்பதால், தலைமை நீதிபதியின் முடிவுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பொது நல வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கு பதில், நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கை விசாரிப்பதாக 'முதல் பெஞ்ச்' தெரிவித்தது. 

பின, தலைமை நீதிபதி கூறியதாவது:நிவாரண உதவிகள் வழங்குவதில், அரசு துறைகளுக்கு மத்தியில், ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் இருப்பதாக தெரியவில்லை. வெள்ள நிவாரணத்துக்காக வழங்கப்படும் உதவியை, முதல்வரின் பொது நிவாரண நிதியில் சேர்க்காமல், எந்த நோக்கத்துக்கு பெறப்பட்டதோ அதற்காக பயன்படுத்த வேண்டும்.மீட்பு பணியில் மத்திய படையினரும் ஈடுபட்டனர். எனவே பாதுகாப்பு துறையின் கருத்தையும் கேட்க வேண்டும். இவ்வழக்கில், மத்திய, மாநில அரசுகள் 15ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.

தமிழக அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, ''நிவாரண நடவடிக்கைகளில் எந்த சுணக்கமும் இல்லை. வீடு வீடாக கணக்கெடுக்கும் பணிகள் துவங்கி விட்டன,'' என்றார். 

விசாரணையை டிச., 16க்கு 'முதல் பெஞ்ச்' தள்ளி வைத்தது.

Comments