வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம்: 10000 நிரந்தர வீடுகள் - ஜெ.

Jaya announced solatium to the flood affected peopleOneIndia News : சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், குடிசை வீடுளை இழந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாகவும் 10 கிலோ அரிசி மற்றும் வேட்டி சேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களான கடலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த, அமைச்சர் பெருமக்கள் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதுமட்டும் இன்றி சென்னை மாநகரில், ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி வீதம், 15 மண்டலங்களிலும் உயர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையருடன் இணைந்து மேற்கொண்டனர். கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெருமழை பொழிந்ததன் காரணமாக வெள்ளத்தில் சிக்கும் மக்களை மீட்பதற்குத் தேவையான ராணுவம், கப்பற் படை மற்றும் விமானப் படை, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, கடலோரக் காவல் படை ஆகியவற்றின் உதவி உரிய நேரத்தில் கோரி பெறப்பட்டது. 5554 நிவாரண முகாம்கள் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பாதிப்புக்கு உள்ளான 13,80,461 மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 5554 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவ்வாறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவன்றி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 72,64,353 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. துரித நடவடிக்கை மழை வெள்ளத்தால் பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை இழந்த பள்ளி மாணாக்கரது நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு புதிய பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ஒரு ஜோடி சீருடை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மழை வெள்ளத்தால் குடும்ப அட்டைகளை இழந்த மக்களுக்கு, நகல் குடும்ப அட்டைகள் வழங்கவும் என்னால் ஆணையிடப்பட்டு, நகல் குடும்ப அட்டைகள் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன. உணவுகள் விநியோகம் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள நபர்களுக்கு பால் மற்றும் பால் பவுடர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 453 டன் பால் பவுடர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 130 டன், திருவள்ளூர் மாவட்டத்தில் 112 டன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 108.5 டன், கடலூர் மாவட்டத்தில் 102.5 டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நகரும் காய்கறி கடைகள் வெளிச் சந்தையில் காய்கறிகளின் விலை அதிகமாகியுள்ளதால், உடனடியாக பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மூலமாக குறைந்த விலையில் காய்கறிகளை பொது மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று நான் ஆணை பிறப்பித்ததன் அடிப்படையில், தற்போது சென்னை மாநகரத்தில் 90 பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகளில் குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் 13 நகரும் அங்காடிகள் மூலமாக விற்பனை நடைபெற்று வருகிறது. மின் விநியோகம் சீராகும் மின் விநியோகத்தைப் பொறுத்தமட்டில், சென்னையில் 95 விழுக்காடு இடங்களில் மின் விநியோகம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. வெள்ள நீர் சூழ்ந்துள்ள ஒரு சில இடங்களில் மட்டும், இன்னமும் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டவில்லை. வெள்ள நீர் வடிந்த பின்னர் இந்த இடங்களில் மின் விநியோகம் சீர் செய்யப்படும். துப்புரவு பணியாளர்கள் சென்னை மாநகராட்சியில் வெள்ளம் வடிந்த இடங்களில் சுகாதாரத்தைப் பேணுவதற்காக மாநகராட்சி துப்புரவுப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. வெளிமாவட்டங்களிலிருந்து 2,000 துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிப் பகுதியில் தற்பொழுது 25,000 துப்புரவுப் பணியாளர்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். துப்புரவு பணிக்கு ஆட்கள் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குப்பைகளை விரைந்து அகற்றும் பொருட்டு மேலும் 5,000 துப்புரவுப் பணியாளர்கள் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்படுவர். மேலும், தேவைக்கேற்ப சென்னை மாநகரத்தில் துப்புரவுப் பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர். அவர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் வழங்கப்படும். இந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளராக பணியாற்ற விரும்புவோர் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். சிறப்பு ஊக்கத்தொகை சென்னை மாநகர துப்புரவுப் பணியாளர்கள் கடந்த பல நாட்களாக குப்பைகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் என்று பாராமல் கடுமையாக உழைக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்படும். சிறப்பு வெள்ள நிவாரணம் மழை வெள்ளத்தால் பாதித்த மக்களின் துயர் துடைக்கும் வகையில் அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 5,000 ரூபாயும், ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் 10 கிலோ அரிசி ஆகியவற்றை சிறப்பு வெள்ள நிவாரணத் தொகுப்பாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேற்காணும் தொகையானது, பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். வேட்டி, சேலை மற்றும் அரிசி ஆகியவை சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். ரூ. 10000 நிவாரணம் வெள்ள பாதிப்பால் குடிசைகளை இழந்த குடும்பங்கள் குடிசை ஒன்றுக்கு 5,000 ரூபாய் மற்றும் சிறப்பு நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் என மொத்தம் 10,000 ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை ஆகியவற்றை பெறுவர். தலா ரூ. 5000 நிரந்தர வீடுகளில் வசித்து வெள்ள பாதிப்புக்கு உள்ளானோர் 5,000 ரூபாய், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை ஆகியவற்றை நிவாரணமாக பெறுவர். பாதிக்கப்பட்ட குடும்பங்களை கணக்கெடுக்கும் பணிகளை உடனடியாக துவங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த கணக்கெடுப்புகள் முடிந்தவுடன் இவை இன்னும் ஒரு சில தினங்களில் வழங்கப்படும். குடிசைகளை இழந்தவர்கள் குடிசைகளை இழந்து வாடும் மக்களுக்குத் தேவையான வீடுகள் கட்டித் தர நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி, இந்த மழையின் காரணமாக குடிசை வீடுகளை இழந்த அனைவருக்கும் பாதுகாப்பான வீடுகள் கட்டித் தரப்படும். சென்னை மாநகரில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் கரையோரங்களில் குடிசை வீடுகளில் தங்கி இருந்தவர்கள் தங்கள் வீடுகளை இழந்து விட்டனர். 10000 நிரந்தர வீடுகள் ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள 10,000 குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் இவர்களுக்கு உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். கால்நடைகளை இழந்தவர்கள் கால்நடை இழந்தோருக்கு, கால்நடை இழப்பிற்கு 30,000 ரூபாய், ஆடு மற்றும் பன்றி இழப்பிற்கு 3,000 ரூபாய் மற்றும் கோழி இழப்பிற்கு 100 ரூபாய் என்ற வீதத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். விவசாயிகளுக்கு நிவாரணம் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை கணக்கெடுக்கும் பணியினையும் விரைந்து முடிக்க நான் ஆணையிட்டுள்ளேன். கணக்கெடுப்பின் அடிப்படையில், 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் சேதமுற்ற நெல் மற்றும் நீர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500 ரூபாய்; மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410 ரூபாய்; நீண்டகால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 18,000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணம் வழங்கப்படும். வங்கிக்கணக்குகளில் நிவாரணம் மேற்காணும் இழப்பீட்டுத் தொகையானது சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இந்த நிவாரணத் தொகையை விவசாயிகள் கடனுக்கு நேர் செய்யக்கூடாது எனவும் உத்தவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments