இது குறித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிய பிறகு 4 நாட்கள் கழித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டிய ரகசியமும், சூட்சமமும் என்ன? தலைமைச் செயலாளரின் அறிக்கையை நானும் படித்தேன். ஒரு பெரிய கட்டுரையைப்போல், கதையை போல் இருக்கிறது.
தலைமைச் செயலாளரின் அறிக்கையின்படி பார்த்தால் முதலமைச்சரோ, அமைச்சரோ, தலைமைச்செயலாளரோ அனுமதி தர வேண்டியதில்லை என்று ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த நான்கரை ஆண்டு காலத்தில் எந்த தண்ணீரை திறந்துவிடுவதாக இருந்தாலும், அது ஏரிகளில் இருந்து திறந்துவிடுவதாக இருந்தாலும், ஆறுகளில் இருந்து திறந்துவிடுவதாக இருந்தாலும், முதல் அமைச்சர் அம்மா அவர்களின் உத்தரவுபடிதான் திறந்துவிடப்படுகிறது என்று இதுவரை நான்கரை ஆண்டுகாலமாக சொல்லப்பட்டு வந்தது. அப்படிதான் அறிக்கையில் வெளி வந்தது. ஆனால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பின் போது மட்டும் முதலமைச்சருக்கு, தலைமைச் செயலாளருக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வதை பார்க்கும்போது இதில் உள்ள உண்மை நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆளுநரை சந்தித்து மிகத் தெளிவாக இதுகுறித்து முறையான நீதிபதி தலைமையில் அமையக்கூடிய விசாரணை தேவை என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார். எந்த தவறும் செய்யவில்லை என்றால் விசாரணை கமிஷன் அமைக்க ஏன் இந்த அரசு தயங்குகிறது?
முதல்அமைச்சர் அம்மா அவர்களின் அனுமதியோடுதான் மழை வந்தது என்று மாவட்ட ஆட்சியர் சொல்லும் அளவிற்கு ஒரு ஆட்சி இருக்கும்போது, இந்த ஏரியை திறக்க மட்டும் முதலமைச்சரின் உத்தரவு தேவையில்லை என்று தலைமைச் செயலாளர் கூறியிருப்பது வேடிக்கைக்குரிய ஒன்று. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
Comments