இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா, தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள இரண்டாவது துணை அறிக்கையில், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 1ம் தேதி பெய்த கன மழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது. ஏராளமான வீடுகளும், வீட்டு உபயோகப் பொருட்களும், வாகனங்களும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். கன மழை மற்றும் வெள்ளம் பாதிப்புகளை முழுமையாக சரி செய்ய ரூ.25,912.45 கோடி தேவைப்படுகிறது. இந்த நிலையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி விடுவிக்க மத்திய நிதியமைச்சகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க நவம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு 8 ஆயிரத்து 481 கோடி ரூபாய் நிதி கோரி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. தமிழகத்தில் மேற்கொள்ளவுள்ள புனரமைப்பு பணிகளுக்காக உடனடியாக 2ஆயிரம் கோடி ரூபாய் வழங்க மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments