OneIndia News : சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் தெரிவித்துள்ளார். சென்னையில் மேகமூட்டமாக இருக்கும் என்றும் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது அப்படியே இருக்கிறது. அது தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து குமரி அருகே லட்சத் தீவு மற்றும் மாலத்தீவு இடையே நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் நல்ல மழை இருக்கும். சென்னையில் மேகமூட்டமாக இருக்கும். அவ்வப்போது மழை பெய்யும். உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் அதிகபட்சமாக 13 செமீ மழை பெய்துள்ளது. திருச்சி, சோழவரம் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் 6 செமீ மழை பெய்துள்ளது.
Comments