சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலைகளுள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளகியுள்ளனர்.
இந்நிலையில், சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் இன்று காலை முதல் திறந்து விடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 3,000 கன அடியில் தொடங்கி 7,500 கனஅடியாக அதிகரித்தது. பின்னர் தற்போது 20,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. புழல் ஏரியிலிருந்து 1,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 12,000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மணலி, புதுநகர், விச்சூர், ஈச்சாங்கோவில் ஆகிய பகுதிவாழ் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவன் தெரிவித்துள்ளதாவது: ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கால் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள திருத்தணி தரைப்பாலம் உடைந்துள்ளது. மேலும், தாமரைப்பாக்கம், வடகரை உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் , 22 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments