OneIndia News : சென்னை: சென்னை விருகம்பாக்கம் பகுதியில் 15 நாட்களாக தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இம்மாத தொடக்கத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் பல இடங்களில் தண்ணீர் வடிந்து இயல்பு நிலைமை திரும்பி வருகிறது. ஆனால், விருகம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னமும் மழை நீர் தேங்கி நிற்கிறது.
அதனை அகற்ற அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் தேங்கியதால், கடந்த 15 நாட்களாக பரபரப்பான ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாறியது. வடபழனியில் இருந்து போரூர் செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆகிறது என்றும், தண்ணிர் தேங்கியிருப்பதால் இருசக்கர வாகனம், கார் போன்றவை பழுதாகிறது என்றும் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாட்டினர். சாலை மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து, தண்ணீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments