பீப் பாடல் சர்ச்சை: டிச.19ல் சிம்பு நேரில் ஆஜராக கோவை போலீஸ் சம்மன்

Coimbatore police issues summons to SimbuOneIndia News : சென்னை: பெண்களைப் பற்றி ஆபாசமாக பாடி இணையத்தில் பதிவேற்றிய 'பீப்' பாடல் விவகாரம் தொடர்பாக, வரும் 19 ம் தேதி கோவை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் சிம்புவுக்கு கோவை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சிம்பு தலைமறைவானதை அடுத்து அவரது தந்தை டி.ராஜேந்தரிடம் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு எழுதி, பாடியதாக கூறப்படும் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ள பாடல் ஒன்று, பீப் சாங் என்ற பெயரில் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பாடலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இருவரையும் கைது செய்யக் கோரியும் கோவை, தூத்துக்குடி,கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் மாதர் சங்கத்தினர் போரட்டங்களும் நடத்தினர். இந்நிலையில் நடிகர் சிம்பு, அனிருத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் கொடுக்க, உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார் காவல் ஆணையர் அமல்ராஜ். இதையடுத்து சிம்பு, அனிருத் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நடிகர் சிம்புவுக்கு கோவை போலீசார் சம்மன் விநி யோகித்துள்ளனர். வரும் 19ம் தேதி காலை கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்திட வேண்டும் என அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மனை விநியோகிக்க கோவை போலீசார், சென்னையில் உள்ள சிம்புவின் வீட்டுக்கு இன்று காலை சென்றனர். கைது பயம் காரணமாக சிம்பு வீட்டில் இல்லை. எங்கோ ஓடி ஒளிந்து தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரிடம் சம்மனை போலீசார் அளித்தனர். அதன் படி வரும் 19ம் தேதி சிம்பு நேரில் ஆஜராகி விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments