கொட்டித் தீர்த்த கோர மழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்கள், அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளன. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, அகதிகளாக சாலைகளிலும், உறவினர் வீடுகளிலும், அரசு முகாம்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் தவிக்கும் அவர்களுக்கு, அரசு தரப்பில், உடனடி நிவாரணமாக உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தொற்று நோய் ஏற்படாமல் இருக்க, சுகாதார உதவிகள் செய்யப்படுகின்றன.
ஆனால், அரசு நிர்வாகத்தை மிஞ்சும் வகையில், தனியாரும், தொண்டு அமைப்புகளும் களத்தில் இறங்கி, கை கொடுத்து வருகின்றனர்; சொந்தபந்தம், வீடு, கால்நடைகள் என, மொத்தமாக மழைக்கு வாரி சுருட்டிக் கொடுத்துவிட்டு, நிராதரவாக நிற்கும் மக்களுக்கு, ஆறுதலாக நிற்கின்றனர்.
ஆனால், அரசு நிர்வாகத்தை மிஞ்சும் வகையில், தனியாரும், தொண்டு அமைப்புகளும் களத்தில் இறங்கி, கை கொடுத்து வருகின்றனர்; சொந்தபந்தம், வீடு, கால்நடைகள் என, மொத்தமாக மழைக்கு வாரி சுருட்டிக் கொடுத்துவிட்டு, நிராதரவாக நிற்கும் மக்களுக்கு, ஆறுதலாக நிற்கின்றனர்.
இதுகுறித்து, வீடுகளை இழந்தவர்கள் கூறியதாவது: தமிழகத்தைப் போலவேதான், அருகில் உள்ள புதுச்சேரியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அங்கு, குடிசை வீடுகளை இழந்த மக்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்து உள்ளார். தமிழகத்தை பொறுத்தவரையில், வெள்ள பாதிப்புகளுக்கு முதற்கட்ட நிவாரணமாக, 940 கோடி ரூபாயை, மத்திய அரசு அறிவித்தது. அடுத்த கட்டமாக, 1,000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய குழு அறிக்கைக்கு பின், கூடுதல் நிவாரணம் வழங்கவும், மத்திய அரசு தயாராக உள்ளது. பொதுமக்கள், தனியார் நிறுவனங்களும் தாராளமாக நிவாரண நிதி அளிக்க முன்வந்துள்ளன. இப்படி இருக்கையில், தமிழக அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் போதாது. வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் எப்படி நிவாரணமாகும்; உடுத்தியிருந்த வேட்டி, சேலையுடன் வீதிக்கு வந்தவர்களுக்கு, அரசு ஒரு வேட்டியும், சேலையும் கொடுப்பதாக கூறினால் எப்படி; அதை வைத்து என்ன செய்ய முடியும்; 10 கிலோ அரிசி, எத்தனை நாளைக்கு பயன்படும்? உரிய நிவாரணம் கிடைக்கும் வரை, நாங்கள் போராடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
* சென்னையில் வெள்ளம் வடிந்த இடங்களில், துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக, வெளி மாவட்டங்களில் இருந்து, 2,000 பணியாளர்கள் வந்துள்ளனர்; மேலும், 5,000 பேர் வருகின்றனர்
* துப்புரவு பணியில், 300 ரூபாய் தினக்கூலி அடிப்படையில் தேவைக்கேற்ப பணியமர்த்தப்படுவர். விரும்புவோர், மாநகராட்சி மண்டல அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்
* குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்களுக்கு, சிறப்பு ஊக்கத்தொகையாக, 2,000 ரூபாய் வழங்கப்படும்
* வெள்ளத்தில் இழந்த பட்டா, கிரையப்பத்திரம், கல்விச் சான்றிதழ், எரிவாயு இணைப்பு அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுக்கு, உடனடியாக நகல் வழங்கப்படும்
* இதற்கான சிறப்பு முகாம், தாலுகா அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில், 14ம் தேதி முதல், இரு வாரங்களுக்கு நடத்தப்படும். ஒரு வாரத்திற்குள், நகல் மற்றும் ஆவணங்களை கட்டணமின்றி வழங்குவர்; பொதுச் சேவை மையங்கள் மூலமாகவும் நகல் பெறலாம்
* இந்த சிறப்பு முகாமில் வழங்கப்படும் நிலம் மற்றும் வீட்டுமனை சொத்து தொடர்பான பத்திர நகல்கள் யாவும், மூல ஆவணங்களாக கருதப்படும்
* ஆட்டோ ஓட்டுனர்கள் பலர், ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆர்.சி., புத்தகம் ஆகியவற்றை இழந்துள்ளனர்; அவையும் இதே நடைமுறைப்படி வழங்கப்படும்
* கால்நடை இழப்புக்கு, 30 ஆயிரம் ரூபாய்; ஆடு, பன்றி, 3,000 ரூபாய்; கோழி, 100 ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பயிர்களுக்கு இழப்பீடு:
வெள்ளத்தால் பாதித்த, வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் சேதமுற்ற நெல் மற்றும் நீர்ப்பாசன பயிர்களுக்கு, ஹெக்டேருக்கு, 13,500 ரூபாய்; மானாவாரி பயிருக்கு, ஹெக்டேருக்கு, 7,410; நீண்டகால பயிர்களுக்கு ஹெக்டேருக்கு, 18 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.இத்தொகை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இந்த தொகையை, விவசாயிகளின் கடனுக்கு ஈடுகட்டக் கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
வீடுகள் ஒதுக்கீடு:வாங்க ஆளில்லை!
குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் கூவம், அடையாறு கரையோரம் வசிப்பவர்களுக்கு, பாதுகாப்பான வீடு கட்டிக் கொடுக்க திட்டமிடப்பட்டது. மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டம், 13வது நிதிக்குழு மானியம், நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், ஒக்கியம் துரைப்பாக்கம், பெரும்பாக்கம் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், சிந்தாதிரிபேட்டை பகுதிகளில் உள்ள கரையோர மக்கள், வீடுகள் பெற முன்வராமல் இருந்தனர்.இவர்களுக்கான திட்டத்தில், 15 ஆயிரம் வீடுகள் கட்டுமான பணி நிறைவடையும் நிலையில் உள்ளன. முதல்வரின் அறிவிப்பை அடுத்து, பாதிக்கப்பட்டோர் விவரம் மாநகராட்சி வாயிலாக பெறப்பட்டு, அடுத்த சில மாதங்களில் வீடுகள் ஒதுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசிடம் கேளுங்க!
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப் போவதாக, தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதாது. மத்திய அரசிடம் கூடுதல் உதவியை பெற்று, கூடுதல் நிதி உதவி அளிக்க வேண்டும்.கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நிதியை, தற்போது தமிழத்தை ஆளுகிறவர்கள், தங்கள் சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தினர். அதனால் தான், அனைத்து கட்சி குழு அமைத்து, நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என, வலியுறுத்துகிறோம்.
- கருணாநிதி, தலைவர், தி.மு.க.,
நிவாரணத் தொகை போதாது!
தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை மிக சொற்பமே. மக்கள், வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கின்றனர். 'டிவி' பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என, அனைத்து பொருட்களும் சேதம் அடைந்துள்ளன. இதை பார்த்த பிறகும், பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆயிரத்தில், நிவாரணத் தொகை அறிவித்திருப்பது சரியல்ல. நிவாரண தொகையை அதிகரித்து, பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கில், அதை செலுத்த வேண்டும்.
- விஜயகாந்த்,தலைவர், தே.மு.தி.க.,
Comments