கனமழை விட்டபாடில்லை: மீண்டும் வெள்ள காடான கடலூர்

தினமலர் செய்தி : கடலுார்: கடலுாரில் நேற்று பெய்த கனமழை காரணமாக, மாவட்டம் மீண்டும் வெள்ளக் காடாக மாறியது.
வங்கக் கடலில், உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடலுார் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று, கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரே நாளில், கடலுாரில், 145 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள், ஏற்கனவே நிரம்பி விட்டதால், வடிகால் வழியில் திருப்பி விடப்படுகிறது.

ஏற்கனவே, மழை வெள்ளம் சூழ்ந்ததால், மீண்டும், 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மழை வெள்ளத்தில் தவித்தனர். அதிகாரிகள், மழைநீர் சூழ்ந்த பகுதிகளைப் பார்வையிட்டு, பாதித்த மக்களை மீட்டு, அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்தனர். கன மழையால் முதுநகர் ரயில் நிலையத்தில், தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் கடலுார், முதுநகர் வழியாக செல்லும், 10க்கும் மேற்பட்ட ரயில்கள், ஒரு மணி முதல் ஒன்றரை மணி நேரம், தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை தான்'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட அறிக்கை: வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்று அழுத்தத் தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்து, குமரி கடல் அருகே மையம் கொண்டு உள்ளது. இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் அனேக இடங்களிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களின், ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யலாம்.சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்;

சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை முதல், நவ., 27 வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யலாம். கனமழைக்கு வாய்ப்பு இல்லை.நேற்று காலை, 8:30 மணி வரை, தமிழகத்தில் அதிகபட்சமாக, மயிலாடுதுறையில், 20; காரைக்காலில், 19 செ.மீ., மழை பெய்துள்ளது.

சென்னையின் சாதனை அளவு:'சென்னையில், 97 ஆண்டுகளுக்கு பின் நடப்பு நவம்பரில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதல் மழை பெய்யலாம்' என, கணிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழை, அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை பெய்யும். குறிப்பாக, நவம்பரில் அதிக அளவு மழை பெய்யும். இந்நிலையில், 15 நாட்களுக்கு மேல், கடலோர மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது.வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலில், ஏற்பட்ட, நான்கு காற்று அழுத்தத் தாழ்வு நிலைகளால், சராசரிக்கும் அதிகமான மழை கிடைத்துள்ளது.வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளி விவரப்படி,இதற்கு முன், 1918 நவம்பரில், 108 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. நடப்பு ஆண்டு நவ., 1 முதல், 22 வரை சென்னையில், 104 செ.மீ., மழை பெய்துள்ளது. இன்னும், 4 செ.மீ., மழை பெய்தால், இதுவே நவம்பரில் பெய்த அதிகபட்ச மழையாக இருக்கும். வரும் நாட்களில், அதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Comments