புதுச்சேரிக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் புதுச்சேரி, கடலூர், சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவாரூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் ஏரிகள், அணைகள் ஆகியன வேகமாக நிரம்பி பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கிராமங்கள் பலவும் வெள்ளநீரில் மூழ்கி உள்ளன. கடந்த 2 நாட்கள் மழை குறைந்து வெள்ளநீர் வடிய ஆரம்பித்ததால், வட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
இந்நிலையில், தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நவம்பர் 14 ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். கடலோர மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி தெற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளதாலும் தென் மாவட்டங்கள் பலவற்றில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments