டிசம்பரில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்! மத்திய அரசு அனுமதி

BCCI chief Manohar invited Pakistan to play series in India: PCB
OneIndia News : லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவில் விளையாட வருமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அழைப்பு விடுத்துள்ளது. தனக்கு பிசிசிஐ தலைவர் ஷஷாங் மனோகர் போனில் அழைப்புவிடுத்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகார்யார் கான் தெரிவித்துள்ளார். மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில், பாகிஸ்தானுக்கு பங்கு உள்ளதாக குற்றம்சாட்டிய இந்திய அரசு, அந்த நாட்டுடனான கிரிக்கெட் உறவை துண்டித்தது. உலக கோப்பை போன்ற பொது போட்டிகளில் மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதின.

இந்நிலையில், ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி வரும் டிசம்பர் மாதம், இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடத்தப்பட வேண்டியது அவசியமாக இருந்தது. பாக். வாரியம் தொடர்ந்து கேட்டுக்கொண்டும் பிசிசிஐ கருத்து கூறவில்லை. இந்நிலையில், லாகூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகார்யார் கான். அவர் கூறியதாவது: வெள்ளிக்கிழமை மாலையில், பிசிசிஐ தலைவர் ஷஷாங் மனோகர் எனக்கு போன் செய்து, இந்தியாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வந்து ஆட வேண்டும் என்று அழைப்புவிடுத்தார். இந்திய அரசு இந்த தொடருக்கு சம்மதம் கூறிவிட்டதாகவும் மனோகர் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் வீரர்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பு வசதிகளை செய்துதரும் என்றும், மொகாலி மற்றும் கொல்கத்தாவில் போட்டிகளை நடத்திக்கொள்ளலாம். அங்கு பிரச்சினை வராது என்றும் மனோகர் உறுதியளித்தார். மேலும், ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி, அரபு எமிரேட்சில் ஆடாமல், இந்தியாவுக்கு வந்து ஆடுமாறு மனோகர் அழைப்புவிடுத்தார். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான மனப்பாங்கு சில குழுக்களுக்கு இருப்பதால் இந்தியாவில் ஆடுவது பிரச்சினையை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவித்தேன். இருப்பினும், இதுகுறித்து வாரிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியும், பாகிஸ்தான் பிரதமரிடம் அனுமதி கேட்டும்தான் முடிவை அறிவிக்க இயலும். எழுத்துப்பூர்வமாக பிசிசிஐ ஒரு அழைப்பை பாகிஸ்தான் வாரியத்திடம் சமர்ப்பிக்க கேட்டுக்கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments