யுவராஜூக்கு திருமண நிச்சயதார்த்தம்

தினமலர் செய்தி : புதுடில்லி: இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், பாலிவுட் நடிகை ஹசல் கீச் ஆகியோரின் நிச்சயதார்த்தம் இந்தோனேஷியாவில் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், 33. கடந்த 2007 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்தவர். 2011 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். பின் நுரையீரல் 'கேன்சரால்' அவதிப்பட்ட இவர், இதிலிருந்து மீண்டு வந்து 2012ல் மறுபடியும் இந்திய அணியில் இடம் பிடித்தார். தற்போது மோசமான 'பார்ம்' காரணமாக சேர்க்கப்படவில்லை. 

இவருக்கும், இங்கிலாந்தின் எசக்ஸ் நகரில் பிறந்த நடிகை ஹசல் கீச்சுக்கும் இடையே நேற்று இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இவர்களது திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கவுள்ளது.

ஹசல் கீச், பல்வேறு வர்த்தக விளம்பரங்கள், 'பிக் பாஸ்' போன்ற டிவி நிகழ்ச்சிகள் தவிர, பாலிவுட் சினிமாவிலும் நடித்துள்ளார். இவர், தமிழில் அஜித் நடித்த பில்லா படத்தில் 'செய் ஏதாவது செய்' என்ற பாடலுக்கு நடனமாடினார். சமீபத்திய ஹர்பஜன் சிங் திருமணத்தின் போது, யுவராஜ், ஹசல் இணைந்து வந்தனர். 

பெங்களூருவில் உள்ள கோவிலுக்கு யுவராஜ், அவரது அம்மா ஷப்னம் சிங், ஹசல் இணைந்து வந்தார்களாம். இவர்களது திருமணம் வரும் டிச. 13ல் தான் நடக்க இருந்தது. உறவினர் ஒருவர் மரணத்தால், திருமணத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

யுவராஜ் சிங் ஏற்கனவே பாலிவுட் நடிகை கிம் சர்மாவுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டார். மற்றொரு நடிகை தீபிகா படுகோனே, பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவுடனும் இணைத்து பேசப்பட்டார். தற்போது ஹசலை திருமணம் செய்யவுள்ளது, யுவராஜ் சிங்கின் சொந்த முடிவு என்று கூறப்படுகிறது.

Comments