கடலூர் : அமைச்சர் ஜெயபால் முற்றுகை

கடலூர் : வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டம் இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் அமைச்சர்கள், இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிதம்பரம் அருகே தில்லை பேரூராட்சி பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மொழுக்குதுறை மீனவ கிராமத்தை அமைச்சர் பார்வையிடவில்லை என்று கூறி மக்கள் கோபத்தில் இருந்தனர். அமைச்சர் அப்பகுதி வழியாக மீண்டும் திரும்பி வரும்போது அவரது காரை சிறைபிடித்ததோடு மட்டுமல்லாது, தகாத வார்த்தைகளாலும் அமைச்சரை அப்பகுதி மக்கள் திட்டித்தீர்த்தனர்.

இதன் காரணமாக, அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. அந்த மீனவ கிராமத்தை பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

Comments